சித்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு கோரிக்கை..!

டெல்லியில் உள்ள மைய இந்திய மருத்துவக்கழகத்தின் ஒரு சித்த மருத்துவ உறுப்பினருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு தமிழக சித்த மருத்துவ மன்றம் தயாராகி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து தமிழக அரசிதழில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ''முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில், வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் 2டி (இரண்டு பரிமாணம்) பார்கோடுள்ள மருத்துவப் பதிவுச் சான்றிதழ் பெற்றுள்ள, படித்துப் பட்டம் பெற்ற மருத்துவ வாக்காளர்களின் பட்டியல், தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் சென்னை-600 006 இல் உள்ள தேர்தல் அலுவலர் / மாநில ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் தங்களுடைய பதிவுச் சான்றிதழை 2டி பார்கோடுடன் கூடிய சான்றிதழாக மாற்றாத படித்துப் பட்டம் பெற்று பதிவுப் பெற்ற மருத்துவர்கள், உடனடியாகப் பழைய மருத்துவப் பதிவுச்சான்றிதழை ஒப்படைத்து விட்டு, புதிய 2டி பார்கோடு சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவும். அவ்வாறு புதியச் சான்றிதழைப் பெறாதவர்கள், நடைபெறவிருக்கும் மைய இந்திய மருத்துவக் கழகத்தின் சித்த மருத்துவ உறுப்பினருக்கான தேர்தலில், போட்டியிடவோ / வாக்களிக்கவோ இயலாது.

மேலும், மருத்துவர்களுக்குரிய வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் / நீக்குதல் ஏதுமிருப்பின், பதிவாளர், தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம், அரும்பாக்கம், சென்னை- 600 106 அவர்களை 05-11-2017-க்கு முன்னதாக தொடர்புகொள்ளவும்'' என்று தமிழ்நாடு சித்த மருத்துவ மன்ற பதிவாளர் கு.ராஜகோபால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!