வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (30/10/2017)

கடைசி தொடர்பு:10:01 (31/10/2017)

’பிரபலத்தின் வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட வெற்றி பெறும்!’ - யாரைச் சொல்கிறார் அன்புமணி

தமிழகத்தில் சினிமாவுக்கும் சினிமா சார்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

anbumani

அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, ”கிரானைட் ஊழல் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு சி.பி.ஐ விசாரணைத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது மிகப்பெரிய மோசடி. இது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் காப்பாற்றுகின்ற செயல். கிரானைட் ஊழலில் பல அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு நேர்மையான அதிகாரி சகாயம், விசாரணை நடத்தி அதற்குத் தெளிவாகப் பரிந்துரைகளைச் சொல்லியிருக்கிறார். இதற்கு சி.பி.ஐ விசாரணைதான் வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நடந்த ஊழலை விசாரிக்க சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும்.

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பே தமிழக அரசை எச்சரித்தோம். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது என்று அப்போதே சொன்னோம். அதற்கு ஓர் அமைச்சர், 'தமிழ்நாட்டில் டெங்கு இல்லை' என்றார். ஆனால், இன்னோர் அமைச்சரோ, 'எங்க அம்மா ஆட்சியில் டெங்கு உள்ளே வராது' என்று சொன்னார். இப்படியெல்லாம் அமைச்சர்கள் பதில் சொன்னார்கள். ஆனால், தற்போது டெங்கு தீவிரமாகி மரணங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. எத்தனையோ முறை சொல்லியும் போராட்டம் நடத்தியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்கவே இல்லை. எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லிவந்தார். இன்று என்ன சொல்கிறார் என்றால், '11,000 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு; 40 பேர் சாவு' என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். எங்கள் கணக்குப்படி 40,000 பேருக்குமேல் டெங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 500 பேராவது உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 50 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மாதமாக விஜயபாஸ்கர் 40 பேர்தான் இறந்துள்ளனர் என்று சொல்கிறார். மக்கள் செத்தாலும் பரவாயில்லை; அமைச்சர் பதவிதான் முக்கியம் என்று அவர் திரும்பத் திரும்ப பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் இவர்களுக்கு மக்கள் முக்கியமல்ல ஆட்சிதான் முக்கியம் என்று. 

கேரளாவில் மம்முட்டி தேர்தலில் நின்றால் கவுன்சிலர்கூட ஆக முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் வீட்டில் உள்ள நாய் தேர்தலில் நின்றால்கூட வெற்றி பெரும். இது நம் தலையெழுத்து. யோசிக்க வேண்டும் மக்களே. பேனர் விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம், நல்ல தீர்ப்பு. பேனர் கலாசாரம் முற்றிலும் ஒழிய வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பது தமிழக இளைஞர்களின் மனதில் இருக்கிறது. அதுபோல் மாற்றம் வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்" என்று கூறினார்.