நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிய கிரண்பேடி உத்தரவு..!

புதுச்சேரியில் சொகுசுக் கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்ய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அமலாபால்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ``ஆளுநர் மாளிகையில் இதுவரை எந்தக் கோப்புகளையும் நான் தேக்கி வைக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாகச் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அப்படி குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள், எந்தக் கோப்புகள் தேங்கியுள்ளன என்பதுகுறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா. முத்தியால்பேட்டை தொகுதிக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்துக்கான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் சட்டமன்ற உறுப்பினர். ஆனால், அந்தக் கோப்பு ஆளுநர் மாளிகையில் இல்லை. பொதுப்பணித்துறையில்தான் இருக்கின்றது.

கிரண்பேடி

நிர்வாக ரீதியாக நடைபெறும் தடைகள் அனைத்துக்கும் என்னைக் குற்றம் சாட்டுவது தவறு. நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். அமலாபால் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததைப்போல் வேறு யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என விசாரணை செய்ய புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக அவர் 15 நாள்களுக்குள் விசாரணை நடத்துவார்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!