வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/10/2017)

கடைசி தொடர்பு:07:22 (31/10/2017)

பெரியார் பல்கலைக்கழக பணி நியமனக் கோப்புகள் மாயம்..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் அங்கமுத்து, பணிக் காலத்தில் இருந்தபோது பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணி நியமனக் கோப்புகள் காணாததால் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுபற்றி அங்கிருக்கும் அலுவலர்களிடம் கேட்டபோது, ''பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து 2012 முதல் 2015 வரை இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த நியமனத்தில் பல முறைகேடுகள் உள்ளதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. பணியாளர்களை இனச்சுழற்சி முறையில் நியமனம் செய்யவில்லை. தகுதியான ஆட்கள் தேர்வு செய்யவில்லை. போலிச் சான்றிதழ் கொடுத்து பலர் தேர்வாகி இருக்கிறார்கள். என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குழறுபடிகளை எப்போது வேண்டும் என்றாலும் தூசு தட்டி எடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலையில் இருந்தது. 

ஆனால், பதிவாளர் அங்கமுத்து தன் பணியிலிருந்து விடுபட்ட போதிலிருந்து இந்தக் கோப்புகள் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ளது. தற்போது புதிய பதிவாளராக இருக்கும் மணிவண்ணன் அங்கமுத்துவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் லீலாவிடம் இந்தக் கோப்புகளைக் கொடுத்துவிட்டு வந்ததாகத் தெரிவித்ததாகவும், பதிவாளர் மணிவண்ணன் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் லீலாவிடம் கேட்டதற்கு, ''என்னிடமெல்லாம் யாரும் எந்தக் கோப்புகளும் தரவில்லை'' என்று அவர் மறுத்ததாகவும் மீண்டும் மணிவண்ணன் அங்கமுத்துவைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு செக்‌ஷனில் கொடுத்துவிட்டுதான் வந்தேன் என்று கூறியதாகவும், இதுதொடர்பாக செக்‌ஷனில் விசாரித்ததற்கு அவர்களும் அங்கமுத்து எங்களிடம் எந்தக் கோப்புகளும் கொடுக்கவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.