வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (31/10/2017)

கடைசி தொடர்பு:11:05 (31/10/2017)

தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்! தேசிய பேரிடர் மீட்புப்படை தகவல்

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக, தேசிய பேரிடர் மீட்புப்படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. சாலையோரங்களில் வசிக்கும் மக்கள், பல சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். கடந்த 2015ல் ஏற்பட்ட பெருமழை, சென்னையைப் புரட்டிப்போட்டது. தற்போதும் அதேநிலை வந்துவிடுமோ என்ற பயத்தில் சென்னை மக்கள் இருக்கின்றனர். 

மழைக் காலங்களில் ஏற்படும் பேரிடர் இழப்பு ஏற்படாமல் இருக்க, மீட்புப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, அரக்கோணம் முகாம்களில்... ஒரு குழுவுக்கு 45 வீரர்கள் என்ற நிலையில் இருக்கின்றனர். தேவையைப் பொறுத்து மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மீட்புப் பணிகளுக்கான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளன" என்று தெரிவித்துள்ளனர்.