கொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்!

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதியான கொரட்டூர், சிட்லபாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதனால், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கால்வாய்கள், கழிவு நீர்க் குழாய்கள் சரியாகத் தூர் வாரப்படாததால், மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல ஓடுகிறது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியை நோக்கி மழை நீர் செல்வதால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் நீரினால் சூழப்பட்டிருக்கின்றன.

கொரட்டூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய மழை நீரை வெளியேற்றிவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மழை வருவதற்கு முன்பே கழிவு நீர்க் கால்வாய்களைச் சீரமைத்திருந்தால், இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் அரசின்மீது குற்றம் சாட்டுகின்றனர்.

"ஒருநாள் மழைக்கே இப்படி அவதிப்படும் மக்கள், இன்னும் மூன்று நாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளநிலையில்  பொதுமக்கள் கடுமையான பாதிப்புகுள்ளாவார்கள்" என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, கொட்டூர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரை கொட்டூர் ஏரியில் கரையை உடைத்து அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். இதனை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மழையால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரைத் தர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது. சாலையோரம், பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!