வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (31/10/2017)

கடைசி தொடர்பு:13:40 (31/10/2017)

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைச் சுவரில் பேருந்து மோதி விபத்து; 20 பேர் காயம்

புதுக்கோட்டை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் 8 மாணவர்கள் உட்பட  20 பேர் காயமடைந்தனர். 

புதுக்கோட்டையில், புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இன்று காலை அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகச் சுவரில் பலமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 20 பேர் காயமடைந்தனர். பேருந்தின் ஓட்டுநரும் இதில் படுகாயமடைந்தார். 

விபத்தில் காயமடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனையில் அனுமத்தித்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள்தான். 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். காவல்துறை, இதுகுறித்து விசாரணை செய்துவருகிறது. அந்த நேரம், மருத்துவமனை சுவர் அருகில் அதிக மக்கள் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.