மழை பாதிப்புகளுக்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | M.K.Stalin has visits rain hit area

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:14:00 (31/10/2017)

மழை பாதிப்புகளுக்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

''ஆளும் குதிரை பேர அரசு, மழை பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள்குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள்குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

ஒரு நாள் மழைக்கே சில இடங்களில் மக்களை வெளியேற்றும் நிலை உள்ளது. ஆளும் குதிரை பேர அரசு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே இதற்குக் காரணம். வர்தா புயல், 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே ஆளும் அரசு கவனம் செலுத்திவருகிறது. மீட்புப்பணிகளில் ஈடுபட தி.மு.க தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அவர்களும் மீட்புப்பணிகளில் ஈடுபடுவார்கள். சகாயம் அறிக்கையை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது'' என்று தெரிவித்தார்.