பசும்பொன் குருபூஜை விழா பாதுகாப்புக்கு வந்த எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு!

பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணிக்கு, கோவையிலிருந்து வந்திருந்த போலீஸ் எஸ்.ஐ., மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க, மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பசும்பொன்னுக்கு வந்துசென்றனர். தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேற்று பசும்பொன்னில் நடந்த குருபூஜை விழாவில் பங்கேற்று அஞ்சலிசெலுத்தினர்.

இதையொட்டி, சுமார் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கென கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட போலீஸார் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 3 நாள்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள், நேற்று இரவுக்குப் பின் ஓய்வெடுக்கச் சென்றனர். 

பாதுகாப்பு பணிக்கு வந்த போது உயிரிழந்த போலீஸ் எஸ்.ஐ

இந்நிலையில், பரமக்குடி பகுதியில் நேற்று பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த கோவை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் முத்து பழனியப்பன் (55), திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நேற்று இரவுப் பணி முடித்த பின், பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த முத்து பழனியப்பன், விடிந்த பின்னரும் எழவில்லை. இதனால், சக போலீஸார் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் எழவில்லை. இதையடுத்து, மருத்துவமனைக்கு முத்து பழனியப்பனைக் கொண்டுசென்று பரிசோதித்தபோது, தூங்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலிசெலுத்தினர். உயிரிழந்த முத்து பழனியப்பனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!