அவசர கதியில் பணி! மக்களை வதைக்கும் கடலூர் மாவட்ட நிர்வாகம்!

மழை,வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில்,  கடலூர் மாவட்ட நிர்வாகம் காலம் கடந்து செய்யும் பணிகளால், வீட்டுக்குள்ளேயே முடங்கிப் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் மக்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட கடலூர்

"ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின்போது, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். அதனால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிக்காக ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கினார். இரண்டு ஆண்டுகளாகியும் அப்பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்றே தெரியவில்லை. அதற்காக, மாவட்ட நிர்வாகமும் அக்கறை காட்டாமல் அலட்சியமாகவே இருக்கிறது. ஏற்கெனவே, தி.மு.க. ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் மற்றும் பொதுநல அமைப்புகள் தூர் வாரிய குளம் குட்டைகளை இந்த நிதியில் தூர் வாரியதாகக் கணக்கு காட்டி, கோடிக்கணக்கில் பணம் கொள்ளைபோயுள்ளது.

கடலூர் நகரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் கட்டும் பணிக்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை வெயில் காலங்களில் செய்யாமல், முதல்வர் வருகை என்ற பெயரில் அலட்சியமாக கிடப்பில் போட்டுவிட்டது மாவட்ட நிர்வாகம். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, வெள்ள எச்சரிக்கை விடுத்த பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அவசரம் அவசரமாக இப்போது கால்வாய் வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்கிக்கிடப்பதால், சாவடி, உண்ணாமலைச்செட்டி நகர், ராம் நகர், கண்ணையா நகர், சாந்தி நகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள மக்கள், வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ''பால் வாங்கப் போக வேண்டும் என்றாலும், ஏணி போட்டு ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளும் வயதானவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம்" என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!