வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (31/10/2017)

கடைசி தொடர்பு:16:40 (31/10/2017)

'சிறை பாதுகாப்புகுறித்து தீர்வு காணப்படும்' - கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா மதுரையில் பேட்டி

பெங்களூரு சிறையில், சசிகலா பாதுகாப்புத் தொடர்பான பிரச்னைகள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சிறைப் பாதுகாப்பு குறித்து எதிர்காலத்தில் தீர்வு காணப்படும் என்று கர்நாடக மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.

கர்நாடக மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிறகு, கோயிலில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "ஜி.எஸ்.டி திட்டம் நாட்டை இணைக்கும் விதமானது. துவக்கத்தில் சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கும். இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். ஜி.எஸ்.டி வரியால் நாட்டில் பல முன்னேற்றங்களைக் காணமுடியும். ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்படும் என்பதற்காக இதை வெறுக்கக்கூடாது.

ஜி.எஸ்.டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும். காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை இரு மாநிலங்களும் சகோதர ஒற்றுமையுடன் இருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் தட்டுபாடு வரும்போதுதான் தண்ணீர் திறப்பதுகுறித்து பிரச்னைவருகிறது. கர்நாடக நடுவர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பெங்களூரு சிறையில், சசிகலா பாதுகாப்புத் தொடர்பான பிரச்னைகள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சிறைப் பாதுகாப்பு குறித்து எதிர்காலத்தில் தீர்வு காணப்படும்'' எனத் தெரிவித்தார்.