வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (31/10/2017)

கடைசி தொடர்பு:18:37 (31/10/2017)

மழைக்காலத்தில் நஷ்டத்தைத் தவிர்க்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள்!

தொழில் செய்பவர்கள், மழைக்காலங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், இயற்கைச் சீற்றங்களின்போது எப்போது என்ன நடக்கும் என்பதை கணிக்கவே முடியாது. தொழில் செய்பவர்கள், தான் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவசியமான, சரியான காப்பீட்டைப் பெறவேண்டும். என்னென்ன இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன, அவற்றில் எவையெல்லாம் கவர் ஆகும் எனத் தெரிந்துகொண்டால், உங்களால் எளிதில் முடிவெடுக்க முடியும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பலவிதமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்துள்ளன. அதன் விவரம்...

மழை

தீ மற்றும் சிறப்பு அபாயக் காப்பீடு!

இந்த இன்ஷூரன்ஸில் 15-க்கும் மேலான இழப்பீடுகள் கவர் செய்யப்படும். குறிப்பாக, இயந்திரங்கள், மூலப்பொருள்கள், விற்பனைக்குத் தயாராக உள்ள பொருள்கள் ஆகியவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பை இந்தக் காப்பீட்டின் மூலம் பெற முடியும். பாதிப்புகளை உறுதிசெய்யும் வகையில் ஆதாரங்கள் சரியாக இருக்க வேண்டும். தேவையான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

சொத்துகளுக்கு இன்ஷூரன்ஸ்!

இயந்திரங்கள், கட்டடம் ஆகியவை சொத்துகளாக எடுத்துக்கொள்ளப்படும். இவை மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகும்போது அதற்கான இழப்பீட்டை உங்களால் இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்திலிருந்து பெற முடியும். அதற்கு சொத்து மதிப்பில் ரீஇன்ஸ்டேட்மென்ட் (Reinstatement) மதிப்பில் ப்ரீமியம் செலுத்தவேண்டியிருக்கும். உதாரணமாக, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓர் இயந்திரத்துக்கு ப்ரீமியத்தைக் குறைப்பதற்காக 5 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடும் குறைவாகவே கிடைக்கும். எனவே, சொத்துகளின் ரீஇன்ஸ்டேட்மென்ட் மதிப்புக்கான ப்ரீமியத்தைச் செலுத்தி இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளவும். 

திருட்டு மீதான இன்ஷூரன்ஸ்:

அலுவலகம் அல்லது தொழிற்சாலையில் திருட்டு நடந்தாலோ, மூடியிருக்கும் கதவை உடைத்துப் பொருளைத் திருடினாலோ ஏற்படும் இழப்புகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். ஒருவேளை திருடியவர் நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், இழப்பீடு கிடைக்காது.

இயந்திரம் செயலிழத்தலுக்கான இன்ஷூரன்ஸ்:

மழையில் இயந்திரங்கள் செயலிழந்துவிட்டால் இந்த இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் செய்யலாம். இயந்திரங்கள் பெரும்பாலும் விலை அதிகமானதாகவே இருக்கின்றன. ஆகையால், அவற்றை காப்பீடு செய்ய தவறினால், பெரும் நஷ்டத்தைச் சந்திக்கவேண்டிவரும். 

எலெக்ட்ரானிக் கருவிகளுக்கான இன்ஷூரன்ஸ்:

பெரும்பாலான தொழில்கள் கணினிமயமாக்கப்பட்டிருப்பதால், எலெக்ட்ரானிக் கருவிகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. எலெக்ட்ரானிக் பொருள்கள்தான் மழைக்காலங்களில் அதிக பாதிப்புக்குள்ளாகும். அப்படி பாதிப்புக்குள்ளானால் இந்த இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். 

பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் சேதாரத்துக்கான இன்ஷூரன்ஸ்:

மழையில் நம்முடைய கட்டடம் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ, பொருள்சேதம் ஏற்பட்டாலோ அதற்கு நாம்தான் பொறுப்பு. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை இந்த இன்ஷூரன்ஸ் மூலம் சமாளிக்கலாம். 

மரெய்ன் - கார்கோ டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ்: 

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பொருள்களை எடுத்துச்செல்லும்போது, மழை வெள்ளத்தால் அவை சேதமடைந்தாலோ, திருடுபோனாலோ, அதற்கான இழப்பீட்டை மரெய்ன் - கார்கோ டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்ஷூரன்ஸ்

லாபத்தில் நஷ்டத்துக்கான இன்ஷூரன்ஸ்!

மழை வெள்ளத்தால் பல நாள்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அந்தச் சமயத்தில் ஏற்படும் லாப - நஷ்டத்துக்கு நாம் இந்த இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் பெறலாம். தடைபட்ட தொழிலை மீண்டும் தொடர எவ்வளவு காலம் (indemnity period) ஆகும் என்பதை தோராயமாகக் கணித்து, அதற்கேற்ப இந்த இன்ஷூரன்ஸ் முன்கூட்டியே எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் என அதற்கேற்ப ப்ரீமியம் இருக்கும். 

இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது என்ன தொழில், எந்தப் பொருள் தயாரிக்கப்படுகிறது, இயந்திரங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு என்ன போன்றவற்றை சரியாகக் குறிப்பிட்டு, அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். ப்ரீமியத் தொகையைக் குறைப்பதற்காக இதில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால், இழப்பீடு குறையவோ, மறுக்கப்படவோ வாய்ப்புள்ளது. இன்ஷூரன்ஸ் தொடர்பான ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கவும். 

`இன்ஷூரன்ஸ் இருக்கிறதே எல்லாவற்றையும் க்ளெய்ம் செய்து வாங்கிவிடலாம்' என்றும் இருக்கக் கூடாது. தொழில்முனைவோர், முடிந்தவரை நஷ்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியிருக்கும் சமயத்தில் இயந்திரங்களையோ, எலெக்ட்ரானிக் பொருள்களையோ இயக்கக் கூடாது. (இதுபற்றி வழிகாட்டும் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.) இல்லாவிட்டால், க்ளெய்ம் செய்யும்போது சர்வேயர், `ஏன் நீங்கள் தண்ணீர் பட்ட இயந்திரத்தை இயக்கினீர்கள்?' எனக் கேட்டு, க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்புண்டு. 

மழை தொடரும் என்று வானிலை அறிக்கையில் சொல்லப்படுகிறது. இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் பொருள்களைக் கவனமாகக் கையாளவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்