சென்னையில் ராஜராஜ சோழன் சதய விழா நடத்த தமிழக அரசுக்கு கோரிக்கை!

ராஜராஜ சோழனின் பிறந்த நாள் (சதய) விழா மற்றும் பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) படப்புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ தலைமை தாங்கினார்.

விழாவில் நிலா காமிக்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட கல்கியின் `பொன்னியின் செல்வன்' படப் புத்தகத்தைக் கூட்டுறவுத் துறைத் தேர்தல் ஆணையாளர் முனைவர் மு.ராசேந்திரன் வெளியிட்டார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார். விழாவில் எழுத்தாளர் பாலகுமாரன், ராஜராஜ சோழனின் நீதித்துறைச் சிறப்பையும் காமிக்ஸ் புத்தக அமைப்பையும் பாராட்டிப் பேசினார். எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகச் சிறப்பு அதிகாரி கி.தனவேல், முனைவர் கோ.தெய்வநாயகம், சிவபாதசேகரன், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் யார் கண்ணன் ஆகியோர் பேசினர்.

சதய விழா

 

விழாவுக்கு வந்தவர்களை தஞ்சை கோ.கண்ணன் வரவேற்றார். நிலா காமிக்ஸ் பதிப்பகத்தைச் சேர்ந்த சரவணராசா பொன்னுசாமி நன்றி கூறினார். விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தமிழ் எழுச்சிப் பேரவைச் செயலாளர் முனைவர் பா.இறையரசன் படித்தார்.

அதில், ''ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத் தமிழக அரசு 10 கோடி ரூபாய் கொடுப்பதற்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றி பாராட்டுகின்றோம். சென்னையில் ராஜராஜ சோழனின் சதய விழாவைத் தமிழக அரசே ஏற்று மிகப் பெரிய அளவில் நடத்த வேண்டும். சமுதாயத் தொண்டிலும் ஆட்சிப் பணியிலும் சிறந்தவர்களுக்கு ராஜராஜ சோழன் பெயரில் விருது வழங்க வேண்டும். தமிழகத் தொல்லியல் துறை மூலம் கீழடியில் நிலங்களை விலை கொடுத்து வாங்கிக் கையகப்படுத்துவதுடன் அங்கு கள அருங்காட்சியகம் விரைவில் அமைக்கவும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட வேண்டுகிறோம்.

சதய விழா

பல்லாவரம் மலையில் ராபர்ட் புரூஸ் புட் 150 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த உலகின் முதல் கற் கோடாரித் தொழிற்சாலை 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தின் எதிரே உள்ள அந்த மலையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதனால், அந்த இடம் வரலாற்றுச் சான்றாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாறும்'' குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!