வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (31/10/2017)

கடைசி தொடர்பு:17:13 (31/10/2017)

‘தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை’- அமைச்சர் தங்கமணி

''தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரவாரியத் தலைமையகத்தில் மின்கட்டணங்களை ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கட்டுவதற்கான திட்டத்தை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம். திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமைச்சர் தங்கமணி, ‘மழையை எதிர்க்கொள்ள அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சாரவாரியம் எடுத்துள்ளது. மின் கம்பிகள் தாழ்வாகச் செல்லும் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக எந்த தொழிற்சாலையாக இருந்தாலும், அவர்கள் நிலத்தை அளித்தால் மின்சார வாரியமே துணைமின் நிலையம் அமைத்து, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது.

அதிகமான மழைப்பொழிவு இருக்கும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மழை நின்றபிறகு மின் இணைப்பு மீண்டும் சீராக்கப்படும். பூமிக்கு அடியில் மின் இணைப்புகள் உள்ள சென்னையின் பல பகுதிகளில் இந்த பிரச்னை இல்லை. அதேநேரம் தலைக்கு மேல் மின் ஒயர்கள் உள்ள புறநகர்ப் பகுதிகளில் மழை நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, கனமழை கருதி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை, பொதுமக்கள் மின்தடை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுபோல் மின்சாரம் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுகிறது. அதைத் தொடர்புகொண்டு மக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் பேசி பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின் உற்பத்தியிலும் எந்த பிரச்னையும் இல்லை’ என்றார்.