வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:19:09 (31/10/2017)

நிலாச்சோறு நம்முடையது... நிலா நோக்கு இரவு நாசாவுடையது! #ObserveTheMoon

நிலா

நம் பூமியின் துணைக்கோளான நிலவுக்கு ஆண்டுதோறும் ஒரு நாளை ஒதுக்கி `International Observe the Moon Night day' கொண்டாடி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இயற்கையைவிட்டு மனித சமுதாயம் விலகிவரும் இன்றைய காலகட்டத்தில் நிலவு குறித்த வரலாற்றையும் நிலவுக்கும் பூமிக்கும் உள்ள உறவையும் பகிர்ந்துகொள்ள அக்டோபர் 28-ம் தேதியை நாசா, நிலவு நோக்கு இரவாக அறிவித்தது. அந்த நாள் மதுரையிலும் கொண்டாடப்பட்டது.

மதுரை தெப்பக்குளத்தின் மேற்குப் பகுதி அன்று சிறுவர்களால் நிறைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நிலவு நோக்கும் நிகழ்வுக்காக நவீன தொலைநோக்கிகள் கொண்டு நிலவைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிலவின் மேடு பள்ளங்கள், மலைகள் உள்ளிட்டவற்றைக் காணும் சர்வதேச நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், மேக மூட்டம் காரணமாக நிலவைத் தெளிவாகக் காண இயலவில்லை. மதுரை மாநகரில் இந்த நிலவு நோக்கும் சர்வதேச நிகழ்வில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது `கலிலியோ அறிவியல்  மையம்.' இந்த அறிவியல் மையம் 2003-ம் ஆண்டு முதலாக மதுரையில் செயல்பட்டு வருகிறது.

மதுரை

இந்த மையத்தின் சிறப்புகள் பற்றி நாம் அறிவியல் மையத்தின் இயக்குநர்  அ.சத்திய மாணிக்கத்திடம் கேட்டோம்.
"நம் விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தபோதும் நாம் முதல் முதலாக அறிந்தது சூரியனையும் சந்திரனையும்தான். விண்வெளி ஆய்வில் நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் 19, 20-ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகள்தான் அத்துறையில் முன்னேறியிருந்தன. இன்று நாமும் அதில் 4-ம் இடம் பெறும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். நிலவில் ஆய்வு செய்த பலரும் நீரில்லை என்று சொன்னபோது நமது சந்திராயன் நிலவின் மூலக்ககூறுகளில் நீர் இருப்பதை உலகுக்குச் சொன்னது.
இன்று விண்வெளித் துறையில் நாம் முன்னேற்றம் காண மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டியது அவசியம். அதற்காக, சுமார் 16 பேர் கொண்ட குழுவாகக் கலிலியோ ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ் உதவி பெற்று நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் வானியல் தொலைநோக்கிகளையும் உருவாக்கியுள்ளது. சாதாரணமான கண்ணாடி வில்லைகளைச் செதுக்கி 6 புள்ளிகள் அளவுள்ள தொலைநோக்கியாக வடிவமைத்துள்ளோம். மதுரையில் உள்ள அனைத்துத் தொலைநோக்கிக் கருவிகளிலும் இதுவே அதிக திறன்கொண்டது" என்றார்.