கோவை மேம்பாலம் திறப்பு விழாவில் பேனர் டு பலூன் கலாசாரம்: காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு!

கோவையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், பேனர்களுக்குப் பதிலாக ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.

கோவை, காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சுமார் 162 கோடி ரூபாய் செலவில், கடந்த 2015-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்தப் பாலம் நாளை திறக்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாலத்தைத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்கின்றனர்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் என்றால், பேனர்கள், கட் அவுட்களை வைத்து அதகளப்படுத்துவார்கள். இதனிடையே, உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மேம்பாலத்தின் மேலே எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ-க்கள் அர்ச்சுணன் ஆகியோரது படங்கள் இடம் பெற்ற ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திறப்பு விழா புதிய மேம்பாலத்துக்குதான் என்றாலும், பழைய அவிநாசி மேம்பாலத்துக்கும் வர்ணம் பூசும் வேலைகள் நடந்து வருகின்றன. அதேபோல, கோவை அண்ணாசாலை அருகே உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட, பேனர்கள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!