மழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க... சில குறிப்புகள்! | "Precautions during Rainy season" - Electricity board

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (01/11/2017)

கடைசி தொடர்பு:09:26 (01/11/2017)

மழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க... சில குறிப்புகள்!

மழைக்காலப் பிரச்னைகள்

மிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்துவருகிறது. இதனால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் மக்கள் பாதிக்காதவண்ணம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காகப் பேரிடர் மீட்புப் பணியினரை உருவாக்கித் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக மின்சார வாரியம் மின் விபத்துகளைத் தடுக்க ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோ பெண் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மழைக்காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பது பற்றிய விழிப்புஉணர்வு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள்:

* “மின்சாரப் பாதைக்கு அருகில் இருக்கும் மரங்களையோ, கிளைகளையோ வெட்டும்போது, அருகில் இருக்கும் மின்வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும். அந்தப் பாதையில் மின் தடை செய்தபின்தான் மரங்களை வெட்ட வேண்டும். 

* மழைக்காலங்களில் மின்சாரப் பெட்டிகள், மின் கம்பிகள், மின் இழுவை கம்பிகளுக்கு அருகில் செல்லக் கூடாது.

* இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது. அந்த நேரத்தில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மரங்கள் போன்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், தாழ்வான பகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் நிற்பதையோ, நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.

* வீட்டில் மின் அதிர்ச்சி எதுவும் ஏற்பட்டால், உடனே ரப்பர் காலணிகளை அணிந்து மின் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அதேபோல், மின் கம்பங்கள் அறுந்துகிடந்தால், அவற்றை மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனே அருகில் இருக்கும் மின் வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

* மின் கம்பங்களிலோ, மின் இழுவை கம்பிகளிலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. 

மின் எச்சரிக்கைப் பலகை* மின் கம்பங்களைப் பந்தல் அமைக்கும் நிலைக்கோ, வேறு எதற்காகவாவது பயன்படுத்துவதோ அல்லது விளம்பரப் பலகைகளை அதில் பொருத்தவோ கூடாது.

* கட்டடங்களுக்கும், மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவேளி இருக்குமாறு கட்டடங்களை அமைக்க வேண்டும். ஐந்து கிலோ வாட்ஸ்க்கு அதிகமான மின் இணைப்புப் பெறும்போது, எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தப்பட வேண்டும்.

* திறந்த நிலையில் கதவு, ஜன்னல்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* வயல் நிலங்களில் மின்சார வேலிகள் அமைக்கக் கூடாது.

* கால்நடைகளை மின்கம்பங்களிலோ, அதன் கம்பிகளிலோ கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

* கனரக வாகனங்களை மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகில் நிறுத்திப் பொருள்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச்செல்வதையும் தவிர்க்க வேண்டும். 

* கைகள் ஈரமாக இருக்கும்போது சுவிட்ச்களைப் போட வேண்டாம்.

* மின்சாரத்தால் ஏற்படும் தீயைத் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய வேண்டாம்.

* தன்னிச்சையாக மின் கம்பங்களிலோ, டிரான்ஸ்ஃபாமர்களிலோ தானாக மக்கள் ஏறி வேலை செய்யக் கூடாது''.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத் துறை, மக்கள் தங்களை மின் விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புஉணர்வு தகவல்களைக் கொடுத்துள்ளது. இதைவைத்து மழைக்காலங்களில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்