’பா.ஜ.க.வைச் சீண்டுவோர் நிம்மதியாக இருக்க முடியாது’: ஹெச்.ராஜா பேச்சு

பா.ஜ.க.வினரைச் சீண்டுபவர்கள்  நிம்மதியாக இருக்க முடியாது என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மதுரையில் கூறியது பரபரப்பாகியுள்ளது.

பாஜகவை சீண்டினால்

தட்சிண ரயில்வே கார்மிக் சங்கம் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக ஹெச்.ராஜா மதுரைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ’வருகிற 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள லாபம் குறித்து அறிவுஜீவிகள் மாநாடு, மாணவர் கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என தேசிய அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினம். நாட்டு மக்களுக்கு வளர்ச்சிக்கான பாதையை பா.ஜ.க. அரசு அமைத்துக் கொடுத்திருக்கிறது.135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் ஒன்றரை சதவிகிதம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள். 

கருப்பு பணம் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். 50 சதவிகித வருமான வரி, 25 சதவிகிதம் உடனடியாக எடுத்துக்கொள்ளலாம், மீதி 25 சதவிகிதம் வட்டி இல்லாமல் நான்கு ஆண்டுகள் கழித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பினால், 99 சதவிகித பணம் வங்கிகளில் வந்து விட்டது. அதனால்தான் முத்ரா வங்கிகள் மூலம் சிறுகுறு தொழில்களுக்குக் கடனுதவி, வீட்டுக் கடன் என்று மத்திய அரசு பணத்தை பம்பிங் செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறது.

சில வருடங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். பா.ஜ.க. அரசை அதிகமாக விமர்சிக்கும் மேற்கு வங்க அரசிடமே மத்திய அரசு நல்லுறவு பேணுகிறபோது, தமிழக அரசுடனும் நல்லுறவைப் பேணக்கூடதா?. மதுரையில்  பா.ஜ.க. கொடியை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் மிரட்டுவதற்காகச் சொல்லவில்லை. பாஜகவினரை சீண்டுபவர்கள் அரசியல் களத்தில் நிம்மதியாக இருக்க முடியாது’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!