வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (31/10/2017)

கடைசி தொடர்பு:15:02 (01/11/2017)

’தூண்களை நேரில் வந்து எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள்’ - ஆர்.டி.ஐ. கேள்விக்கு அலட்சியமாக பதிலளித்த கோயில் நிர்வாகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தற்போது இருக்கும் தூண்கள் எத்தனை என்ற ஆர்.டி.ஐ. கேள்விக்கு, கோயில் திறந்திருக்கும் நேரத்தில் நேரில் வந்து எண்ணிப்பார்த்துக் கொள்ளவும் என்று கோயில் நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளது. 

 

RTI

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஸ்திரத்தன்மை குறித்து யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையைக்  கிளப்பியது. அதில், கோயிலில் இருந்த தூண்களைக் காணவில்லை, மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்பசாஸ்திர விதியைப் பின்பற்றாததும் தெரியவந்துள்ளது. பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால் கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து என யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடமும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஒப்புதல் பெறவில்லை எனவும் தெரியவந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது. அதற்குப் பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாட்டிலேயே சுத்தமான கோயில் என்ற விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த அடுத்த நாளே கோயிலுக்குள் மழை நீர் புகுந்து, கோயில் முழுவதும் தெப்பக்குளமாகக் காட்சியளித்தது .

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சங்குபாண்டி என்பவர் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி தகவல் அறிந்துகொள்ள, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் 7 கேள்விகளைக் கேட்டிருந்தார். அவரது கேள்விகளுக்குக் கோயில் நிர்வாகம் பதில் வழங்கியது. அதில், பல கேள்விகளுக்கு நிர்வாகம் தரப்பில் தரப்பட்ட அலட்சியமான பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,  ஆயிரங்கால் மண்டபத்தில் தற்போது எத்தனை தூண்கள் உள்ளன என்ற கேள்விக்கு, கோயில் திறந்திருக்கும் போது நேரில் வந்து எண்ணிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துள்ளார் கோயில் இணை ஆணையர் நடராஜன். இந்த பதிலால் ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பிய நபர் அதிர்ந்து போயுள்ளார். மக்கள் கேட்கும் கேள்விக்கு இப்படி அலட்சியமான பதிலையா சொல்லும் நிர்வாகம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன், "தகவல் அறியும் சட்டம் என்பது வெளிப்படை தன்மையானது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் நேரில் வந்து பாருங்கள் என்று கூறுவது இயல்பு. இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை" என்றார்.