'அமலாபால் கார் வாங்கியதில் விதிமீறல் இல்லை' - புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்

நடிகை அமலாபால் கார் வாங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார். 

நடிகை அமலாபால் புதுச்சேரியில் சொகுசுக் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்துள்ள புகாரால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

பிரபல சினிமா நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்ட் மாதம் மெர்சிடஸ் எஸ் என்ற சொகுசுக் காரை புதுச்சேரியில் வாங்கியிருந்தார். 1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள அந்தக் காரை வாங்குவதற்கு திலாஸ்பேட்டை, தெரேசா நகரில் வசிப்பதாக புதுச்சேரி முகவரியையும் தந்துள்ளார்.   அந்தக்காரை அவரின் சொந்த மாநிலமான கேரளாவில் வாங்கினால் சுமார் 20 லட்சம் வரை அரசுக்கு வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் காருக்கான வரித்தொகை குறைவு என்பதால் 1 லட்சத்து 15 ஆயிரம் மட்டும் செலுத்தி காரை வாங்கியுள்ளார். இந்த விவகாரம்தான் தற்போது புதுச்சேரி அரசியலில் அனல் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே இதன்மூலம் கேரள அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயை ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால்மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. மேலும், அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

புதுச்சேரி

இந்நிலையில் இன்று காலை இதுகுறித்துப் பேசிய முதல்வர் நாராயணசாமி, ’நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் விதி மீறல்கள் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான், ‘நடிகை அமலாபால் வீட்டு முகவரி கொடுத்து, பிரமாணப் பத்திரத்தையும், புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி. பாலிசி பத்திரத்தையும் தாக்கல் செய்திருக்கிறார். திலாஸ்பேட்டையில் வசிப்பதாகவும், அவர் முறையான ஆவணத்தை சமர்பித்திருக்கிறார். மேலும், எந்த மாநிலத்திலும் எந்த விதமான வாகனங்களைத் தற்காலிகமாகப் பதிவு செய்துகொண்டு, ஓராண்டுக்குள் தங்களது சொந்த மாநிலத்தில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவர் புதிய வாகனம் பதிவு செய்து 4 மாதங்களே ஆகிறது‘ என்று விளக்கமளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!