வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (01/11/2017)

கடைசி தொடர்பு:10:43 (01/11/2017)

2015-ன் கொள்ளளவு இப்போது இல்லை... பெருமழை தாங்குமா செம்பரம்பாக்கம் ஏரி?

தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிட்டது. கடந்த 2 நாள்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது. கனமழையின் எதிரொலியாகச் சென்னையில் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றன. நான்கு ஏரிகளில் மிகப் பிரபலமான ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கனமழையால் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி நள்ளிரவில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் புகுந்தது. கடல்நீர் இரவில் உள்வாங்காது என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல் செயல்பட்டது அதற்கு முக்கியமான காரணம்.

செம்பரம்பாக்கம் ஏரி

மொத்தமாக 85.40 அடிக் கொள்ளளவைக் கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. கடந்த இரண்டு நாள் மழைக்கே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 68.90 அடியை எட்டியுள்ளது. இப்பகுதியில் நேற்று 176 மி.மீ (17 செ.மீ) அளவு மழைப்பொழிந்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு இதே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 66 அடி நீர் இருப்பு இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்துக் கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், சுவுத்திரி கால்வாய், பங்காரு கால்வாய், நேமம் கால்வாய் வழியே அதிகமான தண்ணீர் ஏரிக்கு (சுமார்1719 கன அடி நீர்) வந்த வண்ணம் இருக்கிறது. ஏரியில் இருந்து 52 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது உள்ள தண்ணீரின் அளவு கடந்த ஆண்டு இருந்த தண்ணீரை விடக் குறைவாகவே இருக்கிறது. அதனால் தற்போது உள்ள தண்ணீரால் வெள்ளப் பாதிப்பு இருக்காது. 'செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 2015-ம் ஆண்டு பெருமழைக்குப் பின்னர் ஏரியை முறையாகத் தூர்வாரவில்லை. அதனால் ஏரியின் கொள்ளளவு குறைந்துள்ளது. கொள்ளளவு குறைவாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பும் குறைவாகவே இருக்கும்' என்பது போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரி விபரங்கள்

செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு இன்று 452 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஒரே நாளில் 150 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. கொள்ளளவினைப் பொறுத்தவரை, 50 சதவிகிதம் அதிக நீர் நேற்று பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இதேபோல புழல் ஏரியிலும், பூண்டி ஏரியிலும் நீர்மட்டம் உயர ஆரம்பித்துள்ளது. இதனைத் தவிர்த்து சென்னைக்குள் இருக்கும் சிறுசிறு ஏரிகளும் நிரம்ப ஆரம்பித்துள்ளன. 

கடந்த 2015--ம் ஆண்டு செம்பரம்பாக்கம் நீர் திறப்பின்போது சென்னை முடிச்சூர், மணிமங்கலம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா சாலை, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அரசு கண்டுகொள்ளாத பாதிக்கப்பட்ட மக்களில் அதிகமானோர் சாலை ஓரங்களில் குடியேறினர். கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாறு போன்ற முக்கிய ஆறுகளை ஆக்கிரமித்து அதிகமான கட்டடங்கள் கட்டப்பட்டதாலும், கழிவுநீர்க் கால்வாய்கள் இல்லாததும் இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.

சென்னையில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு 1913 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்