வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (01/11/2017)

கடைசி தொடர்பு:20:30 (01/11/2017)

முகிலன் கைதும் இலங்கையின் வெள்ளை வேன் கதையும்! #SaveEnvironmentalists

தமிழகத்தில் ஒரு சூழலியல் போராளியாக இருப்பது எத்தனைக் கொடூரம் என்பதை உணர ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த மிகச் சில சம்பவங்களைப் படியுங்கள். 

08-05-2016. 

தேனி மாவட்டம் போடி பகுதி. இந்த நிமிடம் தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் செல்வாக்குக் கொண்ட பகுதி. தமிழகத்தின் மிக முக்கிய சூழலியல் போராளிகளில் ஒருவரான முகிலன் அன்று அங்கு போகிறார். தமிழகத்தின் இயற்கை வளத்துக்கு எதிரான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிர்ச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "நியூட்ரினோ" திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்துக்கு அப்போது தன் முழு மனதான ஆதரவை தெரிவித்திருந்த ஓ.பி.எஸ் அவர்கள், அந்த ஆதரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார் முகிலன். மேலும், தமிழகத்தில் ஒரு நாளைக்கு சட்டவிரோதமாக 90 ஆயிரம் லாரி மணல் கொள்ளை நடைபெறுவதற்கு துணை நிற்கும் ஓ.பி.எஸ், அதைச் செய்யக் கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்து அன்றைய பிரசாரத்தை முடித்தார் முகிலன்.

போடி பேருந்து நிலையத்தில், தன் ஜோல்னா பையை மாட்டியபடி பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென சில காவலர்களோடு வருகிறார் போடி காவல் ஆய்வாளர் சேகர். முகிலன் என்ன, ஏது என கேட்கும் முன்பே அவரைப் போட்டு அடிக்கத் தொடங்குகின்றனர்.

சூழலியலாளர் முகிலன் கைது

அடிப்பது என்றால்...உடலின் சதை கிழிந்து, ரத்தம் சிந்தும் அளவுக்கு அடிப்பது. தசைகள் வலி கொண்டு வீக்கம் பெறும் வரை அடிப்பது. லத்தியின் தழும்புகள் ஆழப்பதிந்து, பெரும் எரிச்சலைக் கொடுக்கும் அளவுக்கு அடிப்பது. எலும்புகள் துகள்களாக உடையும் அளவுக்கு அடிப்பது. பேருந்து நிலையத்திலிருந்தவர்கள் அத்தனைப் பேரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். அவர்களில் பலர், ஏதோ திருடன் போல...கொள்ளைக்க்காரன் போல... பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் போல... மிகக் கொடூரமான செயலைச் செய்த ஒரு கேவலமான மனிதன் போல... என்ற எண்ணத்தில்... அந்த அருவருப்பான பார்வையை முகிலன் மீது வீசினர். சதை கிழிந்து ரத்தம் சிந்திய காயங்களை விடவும், அந்தப் பார்வை அவருக்குப் பெரும் வலியைக் கொடுத்தன. அப்படியே அந்தக் கிழிந்த சட்டையோடு அவரை இழுத்து வண்டியில் ஏற்றினார்கள். கைதுசெய்து, அந்த மாலையே அவரை விடுவித்தனர். 

"எங்க வந்து...யாரை எதிர்த்துப் பேசுற...போயிடு அப்படியே..." . 

மீண்டும் அதே பேருந்து நிலையத்துக்கு வந்து, அடுத்த இடத்துக்கு கிளம்புகிறார். 

14-12-2016.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதி. "புதிய மணல் குவாரிகளை அமைக்கக் கூடாது, ஏன்?" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் அப்போதுதான் முடிந்திருந்தது. மாலை மெதுவாக இருட்டத் தொடங்கியிருந்தது. அந்தக் கருத்தரங்குக்கு வந்திருந்த நண்பர் ஒருவர், முகிலனை தன் காரிலேயே அவர் இடத்தில் விடுவதாகச் சொல்ல, அந்தக் காரில் அவர்கள் பயணப்பட்டார்கள். அதில் முகிலன் நண்பரின் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். குழந்தைகளின் விளையாட்டுப் பேச்சுக்களோடு, ரகளையாக போய்க்கொண்டிருந்த அந்தப் பயணம் பெரும் ரணத்தில் முடிந்தது.

ஒரு மணல் லாரி காருக்கு முன்பாகச் சென்று வழிமறித்தது. காரின் இருபக்கமும் தலா மூன்று பைக்குகள் வந்து நின்றன. ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் வீதம், 12 பேர். என்ன, ஏதென்று அந்தக் காரிலிருந்தவர்களுக்குப் புரியவில்லை. முகிலனுக்குப் புரிந்தது. தன்னால் அவர்கள் பாதிக்கக்கூடாது என காரை விட்டு இறங்கினார். கொஞ்சமும் யோசிக்கவில்லை. மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடங்கினர், அந்த மணல் கொள்ளையர்களின் கூலிகள். அடித்த அடியில் வலி தாங்காமல் கீழே சரிந்தவரின் சட்டைப் பிடித்து "தர தர"வென சாலையில் இழுத்துப் போட்டான் ஒருவன். ஒருவன் அவர் மீதாக அமர்ந்து, முகிலனின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினான். மூச்சடைக்க வலி தாளாமல், தன் இரு கைகளையும் தரையில் வேகமாக அடித்துக்கொண்டார். அப்படி அடித்ததில் அவரின் கைகள் காயம் கண்டன. இன்னும் சில நிமிடங்கள் கடந்திருந்தால், நிச்சயம் அவர் கொலை செய்யப்பட்டிருப்பார். ஆனால், அந்தக் காரிலிருந்த குழந்தைகளின் அலறல் அக்கம், பக்கம் இருந்தவர்களை அந்த இடத்தை நோக்கி வரச் செய்தது. கூட்டம் கூடுவதைக் கண்டதும், அந்தக் கும்பல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிப் போனது. அன்றைய தாக்குதலில் உயிர் பிழைத்தார் முகிலன். 

சூழலியலாளர் முகிலன்

23-01-2017

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது தமிழ் இளைஞர் சமுதாயம். அப்போது முகிலன் அலங்காநல்லூரில் இருந்தார். அலங்காநல்லூருக்கு அப்போது ஓ.பி.எஸ். வந்தார். ஆனால், போராட்டக்களத்துக்கு வர முடியவில்லை. முகிலன் தலைமையில் இளைஞர்கள் மிக வீரியமான போராட்டம் நடத்தினர். அவ்வளவு தான்.

அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் 30 பேர் அங்குவந்தனர். தடியடி நடத்தினர். முகிலனுக்கு பலத்த காயம். இது குறித்து உடனே, அவர் புகார் தெரிவிக்க. வழக்குத் தொடரப்பட்டது. ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 
அந்த வழக்குக்காக அடுத்த வாரம் ஆஜராக வேண்டும்; ஆஜராகி கமிஷன் முன்பு அலங்காநல்லூரில் தன்னை தாக்கிய காவலர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்ற நிலையில்தான் கடந்த 18-09-2017 அன்று மிக மோசமான வகையில் காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். 

மிக மோசமான வகையில் என்றால்... அனைத்து மனித உரிமைகளையும் மீறி, சட்டங்களையும் மீறி கைதுசெய்யப்பட்டார். ( அன்று முகிலன் கைது செய்யப்பட்ட விதம் குறித்த விஷயங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்)

பாளையங்கோட்டை சிறையில் 40 நாள்களைக் கடந்து சிறைபட்டிருக்கும் முகிலனிடம், "காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச்" சேர்ந்த ராஜேஸ்வரி மூலம் தொடர்புகொண்டு பேசியபோது...

"இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் போல் இருக்கிறது என் கைது நடவடிக்கை. தூத்துக்குடி பகுதிகளில் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதற்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளோடு நுழையும் போராட்டத்தை தோழர்களோடு மேற்கொண்டோம். அன்றே நாங்கள் கைதுசெய்யப்பட்டு, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தோம். மாலை 6 மணிக்கு எங்களை விடுவித்தார்கள். பின்னர், பைக்கில் நண்பரோடு சென்றுகொண்டிருந்த என்னை திடீரென வெள்ளை வேனில் வந்து, சிவில் உடையில் இருந்த சிலர் வண்டியில் ஏற்றிப் போனார்கள். இவர்கள் யார் போலீஸா, கொள்ளை கும்பலா, கொலைகாரர்களா, கூலிப்படையா, எதுவும் எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் நள்ளிரவு வரை அந்த வண்டியில் சுற்றிக்கொண்டிருந்தபோது, இலங்கையின் வெள்ளை வேன் கதைகள்தான் எனக்கு நினைவில் இருந்தன. 

என்னை எதற்கு, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். விடியற்காலை நேரம்தான் இவர்கள் போலீஸ் என்பதே எனக்குத் தெரிந்தது. ஒரு கைதின்போது மேற்கொள்ள வேண்டியவை என்று நீதியரசர் டி.கே.பாசு குறிப்பிட்டிருக்கும் எந்த விதிகளையும் பின்பற்றாமல் அராஜகமாக நடந்துகொண்ட இந்தக் காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உயிருக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்.  இதுகுறித்து 13 பக்க கடிதத்தையும் நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவருக்கு அனுப்பியுள்ளேன்." 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியபோது போட்ட ஏதோ ஓர் பழைய வழக்கில் முகிலனை கைதுசெய்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

வெள்ளைவேன் சம்பவம்:

தமிழ் ஆட்களைக் கடத்திச் சென்று காலி செய்வதற்கென்றே கொழும்பில் தனி அணி இருப்பதாக மனித உரிமை அமைப்பினர் சொல்கிறார்கள். இந்த டீம் வரும் வாகனம் 'வெள்ளை வேன்'. ஊருக்குள் வெள்ளை வேன் வந்தாலே, யாரையோ கடத்தப் போகிறார்கள் என்று தமிழர்கள் பதற்றமடைகிறார்கள்; ஓடி ஒளிகிறார்கள். வேனில் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். நம்பர் பிளேட் இருக்காது. இதுதான் அந்த எமன் வாகனத்தின் அடையாளம். அதில் இருப்பவர்கள் ராணுவ, போலீஸ் உடைகளில் இருக்க மாட்டார்கள். சாதாரண உடுப் பில், ராணுவ மிடுக்குடன் இருப்பார்கள். 10 பேர் சேர்ந்து ஒருவரை நெட்டி முறுக்கி வேனுக்குள் ஏற்றும்போது, தட்டிக்கேட்க ரோட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். 'வெள்ளை வேன்ல வந்தவங்க எங்க அப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க' என்ற புகார் காவல் நிலையங்களில் செல்லாது. தட்டிக்கேட்க யாரும் இல்லாததால், வெள்ளை வேன் கொடூரங்களுக்குத் தடையே இல்லை!

-முழு கட்டுரைக்கு

40 நாள்களைக் கடந்தும், முகிலன் விடுதலைக்கான எந்த விஷயங்களும் அரசாங்கம் தரப்பிலிருந்து நடப்பதாகத் தெரியவில்லை. சட்டவழிப் போராட்டங்களோடு இணைந்து முகிலனுக்கு ஆதரவான பல சூழலியல் இயக்கங்களும் பல மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை சந்தித்து முகிலனை விடுதலைச் செய்ய வேண்டி மனு கொடுத்திருக்கின்றனர். 

முக்கிய குறிப்பு : முகிலன் ஒரு பொறியியல் பட்டதாரி. தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வந்தவர். ஒருகட்டத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடத் தொடங்கி, தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக இயற்கைச் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடிவருகிறார். 

இதோ அடுத்ததாக, நதிநீர் இணைப்புக்கு எதிராக புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜெயராமன் மீது "தேசத்துரோக வழக்கு" போடப்பட்டிருக்கிறது. இப்படியாக, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சூழலியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மிக அதிகமாக நடந்துவருகின்றன. "குளோபல் விட்னெஸ்" நிறுவனமும், "தி கார்டியனும்" இணைந்து சூழலியலாளர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தொடர்ந்து பதிந்துவருகிறது. 

உலகம் முழுக்க எந்தெந்த நாடுகளில் அரசுகளும், பெருநிறுவனங்களும் கைகோத்து இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன, அதை எதிர்த்துப் போராடுபவர்களை படுகொலை செய்கின்றன என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரேசில், கொலம்பியா, மெக்ஸிகோ, ஹண்டுராஸ், நிகாரகுவே, பெரு போன்ற நாடுகள் இருக்கும் இந்தப் பட்டியலில் மிக முக்கிய இடம் இந்தியாவுக்கும் உள்ளது. 

"நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எதிராக எந்தப் போராட்டங்கள் நடந்தாலும், அதை யார் நடத்தினாலும் அவர்களை மூச்சுத் திணற வைத்து போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென்பதை இந்திய அரசாங்கம் நேரடியாகக் காவல்துறைக்கே உத்தரவிட்டிருக்கிறது. மற்ற நாடுகளில் சூழலியலாளர்களைக் கொல்வது கூலிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் காவல்துறையே இந்தக் கொடூர நடவடிக்கையில் ஈடுபடுகிறது."  இந்தியாவின் நிலைகுறித்து அந்த அமைப்பின் அறிக்கை இதைத்தான் சொல்கிறது. ( உலகம் முழுக்க சூழலியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்)

அரசை எதிர்த்து அல்ல...அரசின் கருத்துகளுக்கு மாறாக எதையாவது கூறினாலே வழக்குகள் பாய்வது என்பது சர்வாதிகாரத்தின் போக்கே இன்றி வேறு இல்லை. அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்க இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கு "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்" எனும் கொடூர ஆயுதம் இருக்கிறது, இலங்கையில், அரசை எதிர்ப்பவர்களை அவர்கள் அழிக்க, அந்தப் போர்ச்சூழலை அவர்கள் காரணமாகக் கொண்டிருந்தார்கள். 

ஆனால், மக்களால் அங்கீகரிக்கப்படாத முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற கேள்வி எழுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்