கந்துவட்டி புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளார் கரூர் கலெக்டர்!

"கரூர் மாவட்டத்தில், கந்துவட்டி வசூலிப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களைப் பற்றி பொதுமக்கள் 04324-256508 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

 கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், கந்துவட்டி வசூலிப்பதைத் தடைசெய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ், "தமிழ்நாடு அதிக அளவு வட்டி வசூல் தடை சட்டம் 2003-ன் கீழ், அரசு நிர்ணயித்த சதவிகிதத்துக்கும் அதிகமாக வட்டி வசூல் செய்வது குற்றமாகும். அதிக வட்டி வசூல்செய்வது தொடர்பான புகார் மனுக்கள்மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து விசாரணை மெற்கொண்டு, அதிக வட்டி வசூல் செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிக வட்டி வசூல் தொடர்பாக, பொதுமக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண் 04324-256508 மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் 9498110765 என்ற எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், தங்களது அலுவலகத்துக்கு அதிக வட்டி வசூல் தொடர்பாக வரும் புகார்களை உடனடியாக காவல்துறையினருக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதிக வட்டி வசூல் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்பொருட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிக வட்டி வசூல் செய்வது தொடர்பான புகார் மனுக்கள் தனிப் பதிவேட்டில் பதியப்பட்டு, அந்த மனுக்கள், உடன் நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. மேற்காணும் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!