”இது சட்டபூர்வமாகச் செய்யப்பட்ட மோசடி” - அமலாபால் விவகாரத்தில் கொதிக்கும் கிரண்பேடி

”தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தரகர்களாக மட்டுமே செயல்படுகின்றன” என்று அமலாபால் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமலாபால்

பிரபல திரைப்பட நடிகை அமலாபால், போலி முகவரியைத் தந்து புதுச்சேரியில் 1.12 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் எஸ் என்ற காரைப் பதிவு செய்திருக்கிறார் என்று அவர்மீது புகார் எழுந்தது. அதேபோல, பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளர் ஃபாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசில் உட்பட, பலர் இப்படிப் போலி முகவரியைத் தந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கிளம்பியது. புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளருக்கும், போக்குவரத்துத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அலுவலகத்துக்குச் சென்ற கிரண்பேடி, அங்கிருந்த அனைத்துப் பிரிவுகளையும் தீவிரமாக ஆய்வுசெய்தார். அப்போது, வாகனங்களுக்கு வழங்கப்படும் உரிமங்கள் பற்றிய விவரங்களையும் ஆய்வுசெய்தார்.

அதன்பின் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”வரி ஏய்ப்புகுறித்து வந்த புகார்கள் உண்மையானதாக உள்ளது. வாகனங்களின் பதிவுக்கும் ஆதார் அட்டையின் எண்ணை கட்டாயமாக்கும் வரை வசதி படைத்தவர்கள் சாலை வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றும் செயல் நீடிக்கும். சிறிய மாநிலமான புதுச்சேரியில், நிதித் தட்டுப்பாடு உள்ள நிலையில் இப்படியான வரி ஏய்ப்புகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். புதுச்சேரி நிர்வாகத்தில் பெரிய அளவில் சீரமைப்பு தேவைப்படுகிறது. அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற வேண்டியுள்ளது. இது, சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட மோசடியாகும். இந்த மோசடி தொடர்பாக, மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருக்கிறேன். சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு தெரிந்துகொள்ள வேண்டும். மதுவின் மூலம் கிடைக்கும் பாவப்பட்ட பணத்தைத்தான் நாம் வருவாயாகப் பெறுகிறோம்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த வசதிபடைத்தவர்கள், விலையுயர்ந்த கார்களை வாங்கி, இப்படி மோசடியாகப்- பதிவுசெய்வதால், நமக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு நேரிடும். இதேபோல, பல புகார்கள் தற்போது என்னிடம் வந்திருக்கின்றன. குறிப்பாக, புதுச்சேரியில் இயங்கிவரும் 75 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சிலவற்றில் மட்டுமே பயிற்சிக்கான வசதிகள் உள்ளன. வெறும் பெயரளவுக்கு மட்டுமே ஓட்டுநர் பள்ளிக்கான உரிமத்தை வைத்துக்கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தரகர்களாகச் செயல்படுகின்றனர். முழு ஆய்வுக்கு (FC) வரும் வாகனங்களை முறையாகச் சோதனைசெய்யாமலே மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுக்கின்றனர்” என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!