வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (01/11/2017)

கடைசி தொடர்பு:11:55 (01/11/2017)

நகைக்காக மூதாட்டியைக் கொன்ற பட்டதாரிப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

 

நகைக்காக மூதாட்டியைக் கொன்ற பட்டதாரி பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, திருச்சி மகிளா நீதிமன்றம்.

கடந்த 2015 பிப்ரவரி 2-ம் தேதி, திருச்சி பட்டர்வர்த் சாலையில் குடியிருந்துவரும் நளாயினி என்பவரின் அம்மா முத்துரத்தினவதி, 80 வயது மூதாட்டி. அவரது வீட்டின் டைனிங் ஹாலில், வயிற்றில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலைசெய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

அன்று, உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று திரும்பிய நளாயினியும் அவரது மகனும், பிணமாகக் கிடந்த தாயைப் பார்த்து அதிர்ந்தனர். முத்துரத்தினவதி அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 3 பவுன் வளையல்கள், ½ பவுன் தோடு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையைத் துவக்கினார்கள், கோட்டை காவல் நிலைய  போலீஸார். இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன், நளாயினி வீட்டு மாடியில் பெற்றோருடன் வசித்துவந்த 22 வயது பட்டதாரிப் பெண்ணான திவ்யபிரியா, பக்கத்து வீட்டு பூக்களைப் பறித்தபோது, கடுமையாகத் திட்டிய முத்துரத்தினவதி பாட்டியம்மாள் மீது கோபம்கொண்டிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து ,அவரது வீட்டுக்குள் நுழைந்து, அவரைக் கீழே தள்ளி கத்தியால் குத்திக் கொன்று, அவரின் 8½ பவுன் தங்க நகைகளை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட திவ்யபிரியா, சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அந்த வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், “குற்றவாளி திவ்யபிரியா, கொலை செய்யும் நோக்கில் அத்துமீறி வாதியின் வீட்டுக்குள் சென்ற குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொலைக்குப் பின் நகைகளைத் திருடிய குற்றத்துக்காக 7 ஆண்டுகளும், ரூபாய் 3,000/- அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு, தீர்ப்பு வழங்கினார்.

நகைக்காக மூதாட்டியைக் கொலைசெய்த பட்டதாரிப் பெண்ணான திவ்யபிரியாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதால், திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க