வடகொரியா அணுகுண்டுச் சோதனை; சுரங்கம் இடிந்து 200 பேர் பலி!

செப்டம்பர் மாதத்தில், வடகொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை காரணமாக, சுரங்கம் இடிந்துவிழுந்ததில் 200 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வடகொரியா அணுகுண்டு சோதனை

ஜப்பானிய செய்தி நிறுவனம் 'அஷாகி' வெளியிட்டுள்ள செய்தியில், ''செப்டம்பர் 3-ம் தேதி, வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனைசெய்தது. அவை, ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. 120 கிலோ டன் எடைகொண்டது.

இதன் காரணமாக, Punggye-ri  மலைப் பகுதியில் அணுகுண்டுச் சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தரைக்கு அடியில் நடத்தப்படும் அணுகுண்டுச் சோதனைகள், மலைப் பகுதிகளில்  நிலச்சரிவை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம்மை புவியியல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல கதிர்வீச்சு வெளியாகியுள்ளது'' என்று கூறியுள்ளது. 

Punggye-ri மலைக்கு அடியில்தான்  வடகொரியா தொடர்ச்சியாக அணுகுண்டுச் சோதனைகளை நடத்திவருகிறது. இதுவரை 6 முறை அணுகுண்டுகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன விஞ்ஞானி வாங் நயான் கூறுகையில், ''100 கிலோ டன் என்பது அதிக சக்திகொண்டது. வடகொரியாவின் அணுகுண்டுச் சோதனையால், அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கதிர்வீச்சு ஏற்பட்டால், சீனாவும் பாதிப்புக்குள்ளாகும்'' எனத் தெரிவித்துள்ளார். 

வட கொரிய அதிபர் கிம்

வடகொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனையில், முதன்முறையாக உயிர்கள் பலியானதாக வெளியான தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிந்துவிழுந்த சுரங்கத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வடகொரிய அரசிடமிருந்து எந்த விஷயத்தையும் கறந்துவிட முடியாது. பிற செய்தி நிறுவனங்களால் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. 'அஷாகி' செய்தி நிறுவனம், 'வடகொரியாவிலிருந்து கிடைத்த நம்பத் தகுந்தத் தகவல் இது ' எனத் தெரிவிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!