எந்த நேரத்திலும் காவலர்கள் எரிமலையாய் வெடிக்கலாம்! முதல்வரை எச்சரிக்கும் அன்புமணி | Anbumani slams edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (01/11/2017)

கடைசி தொடர்பு:10:49 (01/11/2017)

எந்த நேரத்திலும் காவலர்கள் எரிமலையாய் வெடிக்கலாம்! முதல்வரை எச்சரிக்கும் அன்புமணி

எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றாலும் கூட, வேண்டுமென்றே காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்தி பந்தா காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் சார்ந்த தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக காவல்துறையை அனைத்து வழிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் தமிழக அரசு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. காவல்துறையினரின் உரிமைகளை மறுத்து, அமைதிப்படையாகச் செயல்படவேண்டிய காவல்துறையை, அடிமைப்படையாக நடத்த ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், மற்ற அரசுத் துறைகளில் பணியாற்றும் 10-ம் வகுப்பு தகுதிகொண்ட ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பயன்கள், வரையறுக்கப்பட்ட பணி நேரம், வார விடுப்பு, கூடுதல் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், பதவி உயர்வு, படிகள் உயர்வு, மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்தல், உயரதிகாரிகளின்  வீட்டு வேலைக்கு காவலர்களைப் பயன்படுத்தும் ஆர்டர்லி முறையை ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையிலும் ஒழித்தல், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக வழங்குதல், காவலர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாக காவல்துறையினர் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்திற்கு முன்பாக ஜூலை 4-ம் தேதி, காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். அதில் இடம் பெற்றிருந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமடுக்கவில்லை. புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கூட இன்னும் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, காவலர்களுக்கான உணவுப் படி, சென்னை காவல்துறையினருக்கு ரூ.200 ஆகவும், மற்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.150 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை மாநகரக் காவலர்களுக்கு உணவுப்படியாக மாதம் ரூ.5200 வழங்கப்படும் நிலையில், மற்ற மாவட்டங்களில் ரூ.800 மட்டும்தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்களில், சபிக்கப்பட்டவர்கள் என்றால் காவலர்கள்தான். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் எதுவுமின்றி, அழைக்கப்படும் போதெல்லாம் ஓடிவந்து பணி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆட்சியாளர்களின் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்டால், பல நேரங்களில் இரு நாள்களுக்கு, இயற்கை அழைப்புகளுக்குக்கூட இடம் கொடுக்காமல், சாலையோரங்களில் விழிப்புடன் காவல் காக்க வேண்டும். குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையைத் தியாகம்செய்யும் அவர்களுக்கு, உரிய அங்கீகாரமும் போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பதுதான் சோகமும் துரோகமும் ஆகும்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, காவல்துறையினரின் பணிச்சுமை  பல மடங்கு அதிகரித்துவிட்டது. எடப்பாடி, சென்னையிலிருந்து வேலூர் சென்றால், வழி நெடுகிலும் காவலர்கள் நிறுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளியூர் விழாக்களில் கலந்துகொண்டு  நள்ளிரவில் அவர் சென்னை திரும்பினால்கூட மாநகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றாலும்கூட, வேண்டுமென்றே காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்தி பந்தா காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முதலமைச்சரின் பாதுகாப்பு என்ற பெயரில் தாங்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பதுகுறித்து நூற்றுக்கணக்கான காவலர்கள் எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். குறிப்பாக, பெண் காவலர்கள் படும் அவதி கொடுமையானது.

தமது பந்தாவுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இப்படியெல்லாம் காவலர்களைச் சுரண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகளை யோசிக்காமல் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நியாயமான கோரிக்கைகள்கூட நிறைவேற்றப்படாததால், காவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அது எந்த நேரமும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாக வெடிக்கும் ஆபத்துள்ளது. இதை உணர்ந்து, காவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.