வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (01/11/2017)

கடைசி தொடர்பு:16:44 (01/11/2017)

சதயவிழாவிற்கு ஓ.என்.ஜி.சி அளித்த நிதி... நன்கொடையா, கமிஷனா?!

ராஜராஜ சோழனின் 1032-வது சதய விழாவுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து 7 லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது தமிழக அரசு!

''இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சோழ மண் வளமாகவும், செழிப்பாகவும் வாழ நீர்நிலைகளை அருங்கொடையாகக் கொடுத்துச்சென்ற மாமன்னன் ராஜராஜ சோழன்! விவசாயத்தை உயிராகக் கருதிய அந்த மாமன்னனின் 1032-வது சதய விழா தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இயற்கை வளங்களை முற்றிலும் அழிக்கத் துடிக்கும், டெல்டாவைப் பாலைவனமாக மாற்ற நினைக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து 7 லட்சம் ரூபாயை நன்கொடையாக வாங்கி சதயவிழாவை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளதா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஓஎன்ஜிசி

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சிக்காகத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரிடம், மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் காவிரி பிரிவு செயல் இயக்குநர் குல்பீர்சிங் 7 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 சதயவிழா

இதுகுறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நல்லத்துரையிடம் பேசினோம். ''ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டிருப்பது இந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்குத் தெரியாதா? முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்குத் தெரியாதா? ஒ.என்.ஜி.சி நிறுவனத்திடம் 7 லட்சம் ரூபாயை வாங்கியிருப்பது விவசாயிகளுக்குச் செய்யும் பச்சைத் துரோகம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் எதற்காக 7 லட்சத்தை வாங்கினார்கள்? மீத்தேன் திட்டத்தை மீண்டும் டெல்டாவில் காலூன்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட லஞ்சம். ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெரியகோவிலின் அருகே சதயவிழாவுக்குப் பொதுமக்களை வரவேற்று ஃப்ளெக்ஸ் வைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரத்தநாடு ஒன்றியத்தில் 35 கிராமங்களும், பாபநாசம் ஒன்றியத்தில் 4 கிராமங்களுமாக மொத்தம் 39 கிராமங்களில் ஆய்வு செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணும், ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருந்த வைத்திலிங்கமும் சேர்ந்து விவசாயிகளை அடகு வைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்க நினைக்கும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் நன்கொடையாக 7 லட்சத்தை வாங்கித்தான் சதயவிழாவை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் இருக்கிறதா? இதன் பின்னணியில் பலகோடி தொகை பரிமாற்றப்பட்டிருக்கிறது. தி.மு.க-தான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்ததாகச் சொல்லி ஓட்டு கேட்டது அ.தி.மு.க. இனிவரும் காலங்களில், 'மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்' என்று சொல்லி ஓட்டு கேட்கும் யோக்கியதை எடப்பாடி அரசுக்குக் கிடையாது. அமைச்சர் துரைக்கண்ணுவும், எம்.பி வைத்திலிங்கமும் பதவி விலக வேண்டும். ராணுவமே களமிறங்கினாலும் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடத் தயாராகிவிட்டோம்'' என்றார்.

 ஓஎன்ஜிசி

“சோழநாடு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீர் நிலைகள், குளம், குட்டை, வயல்வெளிகளை நமக்குக் கொடையாகக் கொடுத்துவிட்டுச் சென்றவன் ராஜராஜ சோழன். இயற்கை வளங்களையும், விவசாயத்தையும் அழிக்கும் மத்திய அரசின் மீத்தேன் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், ஓ.என்.ஜி.சி-யிடமிருந்து 7 லட்சம் ரூபாயை சதயவிழா நன்கொடையாக வாங்கியிருப்பது பிச்சை எடுத்ததற்குச் சமமானது. ஒரு மாநிலத்தின் விவசாய அமைச்சரே இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்யலாமா? அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தொகுதியில்தான் 39 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. வாழ்வாதாரத்தையே சுரண்ட நினைக்கும் ஓ.என்.ஜி.சி-யிடம் கையை நீட்டியிருக்கிறார்கள்.

விவசாயிகளாகிய எங்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் கேட்டிருந்தால்கூட விவசாயிகளும் விவசாயக் கூலித்தொழிலாளர்களும் 17 லட்சத்தை அள்ளிக்கொடுத்திருப்போம். ஓ.என்.ஜி.சி-யிடம் பணம் வாங்கியதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 29 ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாத அக்கறை இப்போது வந்ததற்கு என்ன காரணம்? இவர்களுக்கு ராஜராஜனைப் பற்றிப் பேசுவதற்கோ அல்லது கோயிலுக்கு அருகில் செல்வதற்கோ கூட தகுதி கிடையாது. ஓ.என்.ஜி.சி-யிடம் வாங்கிய காசை திருப்பிக் கொடுக்கணும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும்'' என்று வெடித்து முடித்தார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

ப.ராஜேஸ்வரன்

டி.டி.வி அணியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ப.ராஜேஸ்வரன் கூறுகையில், '' 'மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் அமரவிடக் கூடாது. ஆகையால், விவசாயிகளாகிய நீங்கள் அ.தி.மு.க ஆட்சியைத் தொடரச் செய்ய வேண்டும்' எனத் தேர்தலின்போது பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. அவருடைய பிரசாரத்தில் வெற்றிபெற்று அமைச்சராகவும், எம்.பி-யாகவும் அமர்ந்தவர்கள் துரைக்கண்ணுவும், வைத்திலிங்கமும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு 7 லட்சம் ரூபாயை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு சதய விழாவை நடத்துவது அநியாயம்.  இதை உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி அதில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கே இன்னும் முழுமையான அளவில் பணம் கொடுத்துமுடிக்கவில்லை. இந்நிலையில், சதய விழாவுக்கு 7 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? மாநில அமைச்சர், எம்.பி மற்றும் கலெக்டரிடம் பணம் கொடுப்பதை பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டு பெருமை தேடிக்கொள்வதாக நினைத்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் செய்கையின்மூலம் தன் மேல் சேற்றைத்தான் வாரிப் பூசிக்கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தையே அழிக்க நினைக்கிறது தமிழக அரசு. அதற்கான வெள்ளோட்டம்தான் இந்த 7 லட்சம் ரூபாய் நிதி. இதற்குப் பின்னால், இன்னும் எத்தனை கோடி பணம் விளையாடியிருக்கிறது என்பதுகுறித்து சி.பி.ஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்