‘சாமி-2’ படத்திலிருந்து த்ரிஷா விலகியது ஏன்?

‘சாமி’, ‘பீமா’ இரண்டு படங்களிலுமே விக்ரம்-த்ரிஷா காம்பினேஷன் பேசப்பட்டது. அதன்பிறகு, இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இதற்கிடையில், த்ரிஷா தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி பரபரப்பாக நடித்துவந்தார். இப்போது அவர், ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக, ஹீரோயின்களை மையப்படுத்திய படங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார். 

த்ரிஷா

இந்தச் சமயத்தில்தான் இயக்குநர் ஹரி, விக்ரம், த்ரிஷா காம்பினேஷனில் உருவான ‘சாமி’ படத்தின் அடுத்த பாகம் எடுக்கும் வேலைகள் தொடங்கின. ‘சாமி ஸ்கொயர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா உள்பட பிரபு, கீர்த்தி சுரேஷ், சூரி எனப் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி டெல்லி உள்பட பல இடங்களில் ஷூட்டிங் நடந்துவருகிறது. அந்தச் சமயத்தில்தான் ‘சாமி ஸ்கொயர்’ படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அதிரடியாக அறிவித்தார். ‘எதற்காக விலகுகிறார்’ என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். இயக்குநர் ஹரி இந்தப் படத்தின் கதையை த்ரிஷாவிடம் சொல்லும்போது, ஸ்கிரிப்ட்டின்படி த்ரிஷாவின் கேரக்டர் சிறியதாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட 10 முதல் 20 நிமிடங்கள் வரும் அளவே அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்ததாம். முதல் பாகத்திலேயே இருவருக்கும் திருமணமாகிவிடுவதால், இதில் ஆரம்ப காட்சிகளில் வருபவர், பிறகு க்ளைமாக்ஸ் காட்சிகளில் வந்து 2-ம் பாகத்தை சுபமாக முடித்துவைப்பதுபோல சுருக்கப்பட்டு இருந்ததாம். உதாரணத்துக்கு சொல்வது என்றால், ‘சிங்கம்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் அனுஷ்காவின் கதாபாத்திரம் இருந்ததுபோல என்று வைத்துக்கொள்ளலாம். 

த்ரிஷா

ஆரம்பத்தில், இதன் கதையைச் சொன்ன இயக்குநர் ஹரியிடம், ‘என் கேரக்டர் சிறியதாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷுக்குதான் முக்கியத்துவம் இருக்கிறது. தன் கேரக்டரின் நீளத்தை அதிகரித்தால் நன்றாக இருக்கும்’ என்று த்ரிஷா கேட்டிருக்கிறார். ஆனால், ஸ்கிரிப்ட் இறுதி வடிவத்துக்கு வந்தபிறகும் அவரின் கேரக்டர் ஏற்கெனவே சொன்னதுபோலவே இருந்துள்ளது. அதனால்தான் த்ரிஷா ‘சாமி ஸ்கொயர்’ படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!