வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (01/11/2017)

கடைசி தொடர்பு:16:22 (01/11/2017)

வீட்டின் முன் தேங்கிய மழைநீரில் விளையாடிய சகோதரிகளின் உயிரைப் பறித்தது மின்சாரம்!

சென்னை கொடுங்கையூரில், வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடிக்கொண்டிருந்த சகோதரிகள் இரண்டுபேர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி, சாலையோர பள்ளத்தில் வழுக்கிவிழுந்து பலியானார்.

தமிழகத்தில், தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று மழை குறைந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழைக்கு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிநிற்கும் மழை நீரால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். மேடு பள்ளம் தெரியாமல் பலர் தவறி விழுகின்றனர். சுரங்கப்பாதைகள், மழை நீரால் நிரம்பிவழிகின்றன. சாலையில் நடந்துசெல்லும் மக்கள், அச்சத்துடனேயே செல்கின்றனர். சென்னை கோயம்பேட்டில், மழைநீர் தேங்கி நிற்பதால், வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். தொழிலாளிகளும் வேலையின்றி உள்ளனர்.

இதனிடையே, அரியலூரைச் சேர்ந்த ராமர் என்பவர், கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் வேலை செய்துவந்தார். தேங்கிக்கிடக்கும் மழைநீரில் மூட்டைகளைச் சுமந்து லாரிகளில் ஏற்றிவந்துள்ளார். இன்று காலையும் அவர் மூட்டைகளைத் தூக்கிவந்துள்ளார். அப்போது, மழைநீர் தேங்கிக்கிடந்த சாலையோரப் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ராமர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். 

 

 

இந்த நிலையில், கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வசித்துவந்த இரண்டு சிறுமிகள், வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடியுள்ளனர். அப்போது, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததால் இரண்டு சிறுமிகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இரண்டு பேரும் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த  இரண்டு பேரும் சகோதரிகள் என்றும், இவர்கள் பெயர் யுவஸ்ரீ, பாவனா என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

"மின்கம்பி அறுந்துகிடப்பதாக மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு உயிர்களும் போயிருக்காது" என்று பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

இதனிடையே, இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.  மேலும், விசாரணைக்குப் பின்னர், தவறுசெய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியம் சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்தும் நிதியுதவி அளிக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் உடலை இன்றே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனிடையே, பிள்ளைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் தாயாருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று அதிகாரிகள், ஐந்து மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்

இதனிடையே, அலட்சியமாக செயல்பட்டதாக கூறி விசாயசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் ஐந்து மின்வாரிய ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.