வெள்ளத்தால் தரம் இழக்கும் நிலத்தடி நீர்..! தீர்வு என்ன?

தீவிரமடைந்திருக்கும் வடகிழக்குப் பருவமழை, சென்னையையும் கடலூரையும் ஸ்தம்பிக்கவைத்த 2015-ம் ஆண்டு வெள்ளம் கொடுத்த பீதியைக் கிளப்பிவிட்டிருக்கிறது. `மேலும் மூன்று நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்' எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களின் தொடர்பு எண்கள் மக்களின் உதவிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. `1,500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை' எனவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருக்கிறார். அரசை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல், சென்னைவாசிகள் அனுபவத்தைப் பாடமாகக்கொண்டு வேகமாகத் தயாராக ஆரம்பித்துவிட்டார்கள். பகுதிக்கு ஏற்றவாறு ஆங்காங்கே ஏற்பாடுகள், தொலைபேசி எண்கள், வழிகாட்டுதல்கள் மூலம் இணையத்திலும் களத்திலும் சேவைக்குத் தயாராகிறது, வள்ளலார் வியந்த ‘தருமமிகு’ சென்னை.

நிலத்தடி நீர்

சாலைகளில் கழிவுநீர் தாறுமாறாக ஓடி, அத்தனை நீர்வளங்களிலும் சங்கமமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நிலத்தடிநீர் பயன்பாடு எந்த அளவுக்குப் பாதுகாப்பானது, குடிநீர், மக்களின் பயன்பாட்டுக்கான நீரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்குப் பிறகு நிலத்தடி நீரின் தரம்குறித்த ஆய்வில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலப்பண்பியல் துறை பேராசிரியர் இளங்கோ லஷ்மணனிடம், நிலத்தடி நீர்வெள்ளத்தின்போது நிலத்தடி நீரில் ஏற்படும் கலப்படம் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிகள்குறித்து கேட்டோம்.

‘‘2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம், உயிரிழப்புகளையும் பொருளிழப்புகளையும் மட்டும் ஏற்படுத்தவில்லை. வருடம் முழுவதும் அத்தியாவசியமான நிலத்தடிநீரின் மீது பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வில், வெள்ளத்தின்போது நிலத்தடிநீர் ஊற்றுகள், கிணறுகள் எந்த அளவுக்கு ஒட்டுமொத்தக் கசடுகளையும் சேர்த்துக்கொண்டு வந்து கலந்தது, அதன் காரணமாக நீர் குடிக்கும் தன்மையை இழந்திருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது. நான் உள்பட அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தென் ஆப்பிரிக்காவின் ஜூலுலாண்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவு 'சயின்டிஃபிக் டேட்டா' ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. 

வெள்ளத்தின்போதும் வெள்ளத்துக்குப் பிறகும் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் அளவுகோல்படி தண்ணீர் தரமாக இருக்கிறதா என்பதைச் சோதிக்க முடிவெடுத்தோம்.  அடையாறு ஆற்றின் கரையோரங்கள், அடையாறு ஆற்றின் தொடக்கம், அதன் முடிவு, செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்பட 17 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு மூன்று வெவ்வேறு கால இடைவெளிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. காலரா, டைஃபாய்டு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இத்தகைய ஆய்வு, அரசுக்கு உதவிக்கரமாக அமையும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. பருவமழை முடிவுக்கு வந்ததும், தற்போதைய நிலையை அறிவதற்கு அடுத்த மாதமும் நீரின் தரத்தைச் சோதிக்கும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

மழை

பெருவெள்ளத்துக்குப் பிறகு நிலத்தடிநீரின் அளவு பெருமளவு உயர்ந்திருந்தாலும், நிலத்தடிநீரின் பயன்படும்தன்மை பெருமளவில் மோசமடைந்திருந்தது. தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண்கிருமிகளிலும் தாது, உலோகக் கலப்பும் உடல்நலத்தைப் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம் பல்வேறு கோணங்களில், சென்னை நீர் மேலாண்மை, கட்டுமான முறை, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தது. தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில், குடிநீர் மூலமாகவும் நோய்கள் பரவும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே, அரசு தரப்பில் குளோரினேஷன் முறை மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், வீடுகளில் கிணறுகளின்மீது (Flood Proofing of Wells) நீர் புகாத முறையில் கட்டமைப்பை ஏற்படுத்துவது நீண்டகால பலனைத் தரும். 

நிலத்தடிநீரைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மக்களையும் அரசையும் ஒருங்கே சார்ந்திருக்கிறது. குளோரினேஷன் மட்டுமல்லாது, வடிகால் முறைகளை அரசு முறையாக மேற்கொள்ளவேண்டியது அவசியம். நீரைக் காய்ச்சிக் குடிப்பது, வீடுகளில் பைப்புகள், நீர்சேமிப்பு அமைப்புகளைச் சுகாதாரத்துடன் பாதுகாப்பது என்னும் ஆல் டைம் மந்திரங்களை மனதில் வைப்பதுதான் ஒரே வழி” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!