“அமலாபால் விவகாரத்தில் தவறே நடக்கவில்லை!” - அமைச்சர் விளக்கம்!

“நடிகை அமலாபால் சொகுசுக் காரை பதிவு செய்த விவகாரத்தில் சட்டரீதியாகத்தான் தவறு நடந்திருக்கிறதே தவிர, துறைரீதியாக இல்லை” என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகை அமலாபால் போலி முகவரி மூலம் புதுச்சேரியில் சொகுசுக் காரை பதிவுசெய்து வரி ஏய்ப்புச் செய்ததாகப் புகார் எழுந்தது. புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் புகாரின் அடிப்படையில், அமலாபால்மீது வழக்குப்பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார் ஆளுநர் கிரண்பேடி. அதையடுத்து, இந்த விவகாரம் வழக்கம்போல கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்குமான மோதலாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியிலான மோசடி என்று ஆளுநர் கிரண்பேடி விமர்சித்திருந்தார். இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், “நடிகை அமலாபால் கர்நாடகத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கினார். அதற்குச் சட்டரீதியாகத் தற்காலிகப் பதிவெண்ணைப் பெற்று புதுச்சேரிக்கு எடுத்துவந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். போக்குவரத்துத் துறை சட்டவிதிகளின்படி ஒருவர் ஒரு வாகனத்தைப் பதிவுசெய்ய ஏற்புடைய ஆதாரங்களைத் தரவேண்டும். குறிப்பாக, வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி பாலிசி, பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்று உள்ளிட்டவற்றைத் தாக்கல் செய்யலாம்.

அமலாபால்

இவை அனைத்தும் அவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய அஃபிடவிட்டைத் தாக்கல் செய்ததோடு. திலாசுப்பேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றையும் தாக்கல் செய்திருக்கிறார். அதோடு எல்.ஐ.சி பாலிசி போட்டதற்கான சான்றிதழையும் சமர்பித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாகனங்களை வாங்கலாம். போக்குவரத்து விதிப்படி, அதற்கு எந்தத் தடையும் இல்லை. வாகனத்தை வாங்கிய கர்நாடகத்தில் தற்காலிகப் பதிவெண்ணைப் பெற்றுப் புதுச்சேரியில் நிரந்தரப் பதிவெண்ணைப் பெற்றிருக்கிறார். அதேபோல புதுச்சேரியிலிருந்து வேறொரு மாநிலத்துக்குச் சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண் பெறுவதற்கு ஓர் ஆண்டுக்காலம் அவகாசம் இருக்கிறது. மேலும், காவல் துறை எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சன் தலைமையிலான போலீஸ் குழு, அமலாபால் சான்றிதழில் குறிப்பிட்டிருந்த இருப்பிடத்தைச் சென்று விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் துறைரீதியாக ஊழலோ, தவறோ நடக்கவில்லை. சட்டரீதியாக மட்டுமே நடந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கேரள அரசு கேட்கும் அனைத்துத் தகவல்களையும் தருவதற்குத் தயாராகவே இருக்கிறோம். இந்த விவகாரத்தில் தவறே நடக்கவில்லை. அனைத்தும் விதிமுறைகளின்படிதான் நடந்துள்ளது. ஓர் ஆண்டுக்குள் பதிவு எண்ணைப் பெறாவிட்டால் அதற்குச் சம்பந்தப்பட்ட மாநிலம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

துணைநிலை ஆளுநர் தவறு நடந்ததாக எதைக் கூறுகிறார்? ஆவணங்களைத் தாக்கல் செய்தவுடன் அதைச் சரி பார்த்துத்தான் பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். எந்த நோக்கில் ஆளுநர் குற்றம் சாட்டினார் என்று தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருக்கின்றன. அமலாபால் வாகனத்தைப் பதிவு செய்து இரண்டரை மாதங்கள்தான் ஆகின்றன. அதன்படி இன்னும் 8 மாதங்களுக்கு மேல் அவருக்குக் கால அவகாசம் இருக்கிறது. புதுச்சேரியில் வரி குறைவாக இருப்பது என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரோல், டீசல், மதுபானங்கள் போன்றவற்றின் விலை இங்கு குறைவுதான். மாநிலத்தின் வருவாய்க்காக வரியைக் குறைத்து வைத்திருக்கிறோம். அதில் தவறு எதுவும் இல்லையே. வரிகளில் உள்ளூர், வெளியூர் என்று எதுவுமே இல்லை. சாலை வரி ஜி.எஸ்.டியில் வரவில்லை. வரியை நிர்ணயிக்க மாநில அரசுக்குச் சுதந்திரமுள்ளது. பெட்ரோல், டீசல் வரி குறைவு என்பதால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களும் இங்கு நிரப்பிச் செல்கின்றனர். அதன்மூலம் வருவாயும் பெருகுகின்றது. அதைத் தவறு என்று சொல்ல முடியாது.  

முகவரி போலி என்பதற்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. வாகனம் பதிவு செய்வோர் முகவரியைப் போக்குவரத்துத்துறை ஆய்வு செய்ய வேண்டியதில்லை. மத்திய அரசின் சட்டப்படித்தான் செயல்படுகிறோம். முகவரியில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்ட விதிகளில் இல்லை. அவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டால் அதைச் செய்யவும் தயாராக இருக்கிறோம் இன்னும் 15 நாள்களுக்குள் இந்த விவகாரம் குறித்து ஆளுநரிடம் அறிக்கையைத் தாக்கல் செய்வோம். தவறு நடந்ததாக மாயைதான் பரப்பப்படுகிறது. ஆனால், தவறு நடக்கவே இல்லை.  மேலும், தனிப்பட்ட முறையில் துணைநிலை ஆளுநருடன் மோதலும் இல்லை” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!