குடியிருப்புப் பகுதியில் பாம்புகளா... வனத்துறையினரை உதவிக்கு அழைக்கலாம்! #Helpline

கோடைக்காலத்தில் தண்ணீர் இன்றி தவித்துக்கொண்டிருந்த சென்னையில் தற்போது மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தாகம் தீர்க்கவந்த வடகிழக்குப் பருவமழையைக் கொண்டாட முடியாமல் திண்டாடி வருகின்றனர் சென்னை வாசிகள். காரணம், தமிழக அரசின் அலட்சியம். இதனால் ஒருநாள் மழைக்கே, பல இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கிவிட்டது. இது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் விலங்குகளும் மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. முழங்கால் அளவு தேங்கியிருக்கும் தண்ணீரில் பாம்புகள் வீட்டுக்குள் நுழைவது, குரங்குகள் வருவது போன்ற சிக்கல்களும் சென்னைவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திவருகின்றன. "இப்படி வரும் விலங்குகளைத் தாக்காமல், எங்களை அழையுங்கள்; நாங்கள் வந்து அவற்றை மீட்டுக்கொள்கிறோம்" என அழைப்பு விடுக்கிறார்கள் வனத்துறையினர்.

தேங்கியிருக்கும் மழைநீர்

வனத்துறை அதிகாரி முருகேசன் இதுகுறித்து கூறுகையில், "பல வருடங்களாக இந்த மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பறவைகள், விலங்குகள் போன்றவை அடிபட்டிருந்தாலோ  குரங்குகள், பாம்புகள் போன்றவை வீட்டுக்கு அருகில் வந்தாலோ பொதுமக்கள் எங்களை உதவிக்கு அழைக்கலாம். உடனே வனத்துறையினரோ எங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களோ அங்கு வந்து விலங்குகளை மீட்டுவிடுவார்கள். சென்னை முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம். அடுத்த 20 நிமிடங்களில் அங்கே வந்துவிடுவோம். மொத்தம் 16 பேர் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் தவிர தன்னார்வலர்களும் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். 

கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மழைபெய்துவருவதால், அதிகளவில் அழைப்புகள் வருகின்றன. சுமார் 30 பாம்புகளுக்கும் மேலாக இதுவரை மீட்டிருக்கிறோம். வடசென்னைப் பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் வந்திருக்கின்றன. இதுதவிர குரங்குகள், நரிகள், மான்கள், பறவைகள் போன்றவற்றையும் பாதுகாப்பாக மீட்டிருக்கிறோம். விலங்குகள் அல்லது பறவைகள் மீட்கப்பட்டவுடன் அதற்கு தகுந்த சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதிகளில் கொண்டுபோய் விடப்படும். எனவே குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் காணப்பட்டால் உடனே எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்றார்.

அழைக்க வேண்டிய எண்: 044-22200335

Do you like the story?

Please Appreciate the Author by clapping!