கொடுஞ்சாவுக்கு நிதியுதவி மட்டும் போதாது!: அரசுக்கு எதிராகக் கொந்தளித்த கமல்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு நடிகர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழைநீரில் விளையாடிய யுவஸ்ரீ, பாவனா என்ற 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்சார ஒயர் அறுந்துகிடப்பதாக மின்வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார்.

இந்தநிலையில், சிறுமிகள் சாவுக்கு அனுதாபமும் நிதியுதவியும் மட்டும் போதாது என்று நடிகர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவுக்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேணடும்’ என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்தச் சம்பவத்துக்கு அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``நாம் நேற்றே அச்சப்பட்டதுபோல், பழனிசாமி அரசின் அலட்சியத்தால் சென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்று அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அச்சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!