வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (01/11/2017)

கடைசி தொடர்பு:21:02 (01/11/2017)

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசும் பள்ளித் தலைமை ஆசிரியர்..! – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

இன்று காலை தேனி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிச் சீருடையில் சில மாணவ, மாணவிகளைக் காண முடிந்தது. கையில் மனுவோடு, கலெக்டரைப் பார்க்க காத்திருந்தவர்களிடம் விவரம் கேட்டோம். அவர்கள் சொன்னது அதிர்ச்சியளித்தது.

நம்மிடம் பேசிய மாணவர் ஒருவர், (அவர்களின் எதிர்காலம் கருதி பெயர், புகைப்படம் தவிர்க்கப்படுகிறது…) “எங்கள் பள்ளிக்குக் கடந்த ஆண்டு புதிதாக ஒரு தலைமையாசிரியர் வந்தார். பெயர் ஜெயச்சந்திரன். அவருக்கு, எங்கள் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளைக் கண்டாலே பிடிக்காது. வெளிப்படையாகச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டிக்கொண்டே இருப்பார். ‘ஏன் சார்... சாதிப்பெயரைச் சொல்லி திட்டுகிறீர்கள்’ என்று கேட்டால், ‘அப்படித்தான்டா திட்டுவேன்… உன் அப்பனையும் திட்டுவேன்..’ என்பார். அவரை எதிர்த்துப் பேசினால் அவ்வளவுதான், வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது வகுப்பறைக்குள் நுழைந்து, எழுந்திருக்கச் சொல்லி, ‘சட்டை ஏன் இப்படிப் போட்டிருக்கிறாய்... முடி, ஏன் இப்படி வெட்டியிருக்கிறாய்... உன் சாதிக்காரனுக்கே உள்ள புத்திதானே இது’ என்று சொல்லிச் சாதியைக் குறிப்பிட்டுக் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார். காரணமே இல்லாமல் அடிப்பார். எங்கள் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லோரும் பயந்துதான் பள்ளிக்குச் செல்வோம். ஒருகட்டத்துக்கு மேல் எங்களால் பொறுக்க முடியாமல்தான் கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க வந்துவிட்டோம்” என்றார்.

தலைமை ஆசிரியர் தாக்கிப் பேசிய மாணவர்கள்

ஒரு பள்ளியின் தலைமையாசிரியரா இப்படி நடந்துகொள்கிறார் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், ‘‘பையன்கள்கூடப் பரவாயில்லை சார். அடி வாங்கிக்கொண்டு இருந்துவிடுவார்கள். ஆனால், எங்களிடம் அவர் ஆபாசமாகப் பேசுவார் சார்” என்று சொல்லிக் கண்ணீர்வடித்தார். 

‘‘திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவியின் பெயர் சொல்லி வெளியே வரச் சொல்வார். வெளியே வந்ததும், ‘வாடி... போடி’ என்று பேச ஆரம்பிப்பார். கொஞ்ச நேரத்தில் கெட்டவார்த்தைகளைச் சொல்லித் திட்டுவது மட்டுமல்லாமல், ஆபாசமாகவும் பேசுவார். எதற்குத் திட்டுகிறார் என்றே தெரியாது. எங்களைத் திட்டுவதைக் கண்டு மாணவர்கள் யாராவது எதிர்த்துக் கேட்டால், அவர்களைக் கண்மூடித்தனமாக அடிப்பார். ஆசிரியர்கள் யாராவது கேட்டால் அவர்களைக் கண்டபடி திட்டுவார். ‘உனக்கு இங்கே வேலை பார்க்க ஆசை இல்லையா? அமைதியாக இரு’ என்று ஒருமையில் பள்ளி ஆசிரியைகளைத் திட்டுவார். இதற்குப் பயந்தே ஆசிரியர்கள் எல்லோரும் அமைதியாக இருந்துவிடுவார்கள். சில மாணவிகள் கொஞ்ச நாள்களாகவே பள்ளிக்கு வருவதில்லை. நாங்கள் அனைவரும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்துதான் எங்களைப் படிக்கவைக்கிறார்கள். ஆனால், எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது அவர் வருவார், திட்டுவார் என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்துதான் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். இந்த விஷயம் எங்கள் வீட்டுக்குத் தெரிந்தால் எங்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். நாங்கள் என்ன தப்பு செய்தோம்? தவறு செய்திருந்தால் எங்களை அடியுங்கள்; திட்டுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், நாங்கள் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக எங்களை ஆபாசமாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்” என்றார் கண்ணீரோடு.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தியிடம் பேசினோம், “மாணவர்களை நேரில் நான் சந்தித்துப் பேசினேன். அவர்கள் என்னிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை நேரில் வரச் சொல்லியிருக்கிறேன். அவரிடம் விசாரணை நடத்தியபின்தான் எதுவும் சொல்ல முடியும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் ஜெயசந்திரனிடம் பேசினோம்... "என் மேல எந்த தப்பும் இல்லை. பள்ளிக்கு வரும் போது நல்ல உடையும், நன்றாக முடி வெட்டிக்கொண்டும் வர வேண்டும் என்று தான் நான் சொல்வேன். நான் இந்த பள்ளிக்கு வந்த பிறகு ஒழுக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன். அது பிடிக்காத சில ஆசிரியர்கள் மாணவர்களை தூண்டிவிடுகிறார்கள். இது தொடர்பான அனைத்து விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் சென்று வழங்கியிருக்கிறேன். அவர் விசாரணை நடத்தி நான் தவறு செய்திருக்கிறேன் என்று சொன்னால், என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்." என்றார்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன மகாகவி பாரதியின் படத்தைத் தாங்கியுள்ள தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில்தான் ஜெயச்சந்திரன் பேசும் சாதிய வார்த்தைகள் வேகமாக மோதுகின்றன. மோதும் அதிர்ச்சியில் பாரதியின் படம் கீழே விழும் காலம் வெகுதொலைவில் இல்லை. மாவட்ட நிர்வாகம் தடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா?


டிரெண்டிங் @ விகடன்