வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/11/2017)

கடைசி தொடர்பு:18:40 (01/11/2017)

’மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள்’ - பள்ளிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்’

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளும் நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு ஆட்சியர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘சென்னை மாவட்டத்துக்கு உட்பட்டப் பகுதிகளில் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நீர் தேங்காதவாறு பராமரிக்கவும், பள்ளி வளாகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காத வண்னம் நிரந்தர வழிவகைகளை ஏற்படுத்தி, அதைக் கண்காணித்து சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும். பள்ளிகளில் மழைநீர் தேங்கி அதனுடன் கழிவுநீர் கலக்காதவாறு கழிவுநீர் வெளியேறும் வழிகளை முறையாகப் பராமரித்து மாணவர்களுக்குத் தொற்றுநோய் ஏற்படாதவாறு அவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுமாறு அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். எனவே, மேற்குறிப்பிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.