நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி!

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி பலியானார். நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தபடியே இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். 

டெங்கு காய்ச்சல்

குருவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 7 வயது மகளான கீர்த்திகா, அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், காய்ச்சல் குணம் அடையாததால் கடந்த 28-ம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். 

இதனிடையே, காய்ச்சல் காரணமாகச் சிறுமி கீர்த்திகா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய நோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததால் பெற்றோரும் உறவினர்களும் அதிருப்தி அடைந்தனர். அத்துடன், தங்கள் பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும் பீதியடைந்து இருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!