வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (02/11/2017)

கடைசி தொடர்பு:11:20 (02/11/2017)

அஜாக்கிரதை அரசு... அவஸ்தையில் மக்கள்... ஸ்தம்பிக்கும் சென்னை போக்குவரத்து!

மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்த கனமழையால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம், மழைநீர் சாலையோரம் உள்ள கால்வாய்களில் சரியாகப் பாய்ந்து செல்லாததே என்று தெரிய வந்துள்ளது. சாலையின் நடுவே பேருந்துகள் செல்வதாலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையோரத்தில் உள்ள தண்ணீரில் பயணம் செய்வது ஆபத்து என்பதால், பேருந்துகளை நம்பி அலுவலகம் செல்வோர், சென்னையில் வீடு திரும்பும்போது, வழக்கமாக பயணம் செய்யும் நேரத்தைவிட கூடுதலாக சில மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. மாநகரின் முக்கியச் சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், அசோக்நகர், கிண்டி, வேளச்சேரி, பாரீஸ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர்.

கனமழை பெய்து வருவதால், 'போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை' என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. 'மழையால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவது ஏன்?' என்று விசாரித்தபோது, "ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள கட்டடம் உறுதியானதாக இல்லை. தவிர, பேருந்துகளும் அதிகளவில் பழுதடைந்து காணப்படுவதால், மழைநேரங்களில் வேகமாக இயக்க முடிவதில்லை. சாலைகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுவதால், மக்கள் அதிகளவில் சாலைகளின் பாதிவரை நடந்து செல்கிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையின் நடுவிலேயே செல்வதால், பேருந்துகள் இயக்கப்படும் நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. இதுவே, பேருந்துகள் தாமதமாவதற்குக் காரணம்” என்று தெரிவிக்கின்றனர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள். 

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் 279 மில்லி மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரே மாதத்தில் 319 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, வழக்கமான அளவைக் காட்டிலும் 15 சதவிகிதம் அதிகம் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை

இன்னமும் தொடர்ந்து மழைபெய்ய வாய்ப்புள்ள சூழ்நிலையில், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அவ்வப்போது தகவல்களைத் தெரிவித்துக் கொண்டுதான் உள்ளது. ஆனால், தமிழக அரசு இந்தத் தகவலைப் பெரிதாய் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த மூன்று நாள்களாகப் பெய்த மழைக்கே சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சியின் நிரந்தரத் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் உள்ள பகுதிகளில் ஓரளவு பணிகள் நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரை வடியச் செய்வதற்கான எந்தப் பணிகளும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "பணியாளர்கள் ஓய்வுபெற்றால் புதிதாகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. மேலும் குப்பை அள்ளுதல் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணிக்காகத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களே நியமிக்கப்படுகின்றனர். நிரந்தரப் பணியாளர்கள் உள்ள இடங்களில் பணிகள் ஓரளவு நடைபெறுகின்றன. ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களைக் கண்டிப்புடன் வேலை வாங்குவது, இயலாத காரியமாக உள்ளது. தவிர, 2015-ம் ஆண்டு பெருமழை, வெள்ளத்தைத் தொடர்ந்து, மழைநீர்க் கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, மழைநீர் வழிந்தோட வகை செய்யப்படும் என்று ஏற்கெனவே அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது, பணிகளும் நடைபெற்றன. ஆனால், பருவமழை தொடங்குவதற்கு முன், முழுவீச்சில் அத்தகைய கால்வாய்களில் மழை நீர் செல்வதற்கான ஆயத்தப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. எதுவுமே வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருந்ததாலேயே இந்தப் பாதிப்புகள். அடுத்த மழைக்கு முன்பாக முழுமையாகப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். 

மழை நீர்

மழை நீர் கால்வாய்களை சீரமைத்து, அவற்றுக்கான கால்வாய்களில் அடைத்துள்ள மண்ணை அப்புறப்படுத்தி, தண்ணீர் சீராகச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாலே, சென்னையில் வெள்ள நீர் தேங்காமல் தவிர்த்து விடலாம். 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னமும் முழுமையாகப் பெய்யவில்லை. மூன்று நாள்கள் பெய்த மழையையே சமாளிக்க முடியாமல், திணறும் அரசு நிர்வாகம் 2015-ம் ஆண்டு பெருமழை, வெள்ளம் போன்று மீண்டும் ஒரு சூழல் உருவானால், என்ன செய்யப்போகிறது என்று இப்போதே பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்