வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:29 (09/07/2018)

விகடன் செய்தி எதிரொலி..! ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் படுக்கைகள்!

                 

விகடன் இணையதளச் செய்தி உபயத்தால், கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கூடுதலாக 15 படுக்கைகளையும் ஒரு டாக்டரையும் நியமித்து மக்களின் சிரமங்களைக் குறைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதோடு, மூன்று முறை இங்கே விசிட் அடித்து தலைமை மருத்துவரை சுறுசுறுப்பாக்கி இருக்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கள்ளப்பள்ளி. இந்தக் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாதாந்தர பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் உட்கார இடமில்லாமல் தரையிலும் படிக்கட்டிலும் உட்கார்ந்திருக்கும் படத்தையும் படுத்திருக்கும் அவலத்தையும் போட்டோ ஆதாரத்தோடு நமது விகடன் இணையதளத்தில் கடந்த 14.10.2017 அன்று, 'தரையில் படுக்க வைக்கப்படும் கர்ப்பிணிகள்... அவலத்தில் அரசு மருத்துவமனை ' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியில், 'இந்த மருத்துவமனையில் மூன்று படுக்கைகள்தான் உள்ளன. கர்ப்பிணி பெண்களோ மற்ற நோயாளிகளோ இங்கு சிகிச்சைக்கு வரும்போது பலமணி நேரம் காக்க வைக்கப்படும் கொடுமை நடக்கிறது. இங்கு பணிபுரியும் இரண்டு டாக்டர்கள் சொந்த கிளினிக்கில் இருந்துகொண்டு இங்கு சரியாக வேலைக்கு வருவதில்லை. அதனால், செவிலியர்களே இங்கு சிகிச்சை பார்க்கும் சூழல் உள்ளது. தமிழமே டெங்கு பீதியில் இருக்கும் இந்த நேரத்தில், இங்கு அதுகுறித்த சிகிச்சையோ சரியான முன்னேற்பாடுகளோ செய்யவில்லை. அதனால், 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்' என்று மக்கள் வைத்த கண்ணீர் கோரிக்கையை அந்த செய்தியின் அடிநாதமாகக் குறிப்பிட்டிருந்தோம்.
 

இந்தச் செய்தி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் கவனத்துக்குப் போக, மறுநாளே மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் சகிதம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விசிட் அடித்தனர். அப்போதும் கர்ப்பிணிப் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டிருக்க, தலைமை மருத்துவரைக் கண்டிப்பு செய்தார். 'இங்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் இனி எந்தப் புகாரும் சொல்லக் கூடாது' என்று அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றார். அதனால் மருத்துவமனையை விறுவிறுவென தூய்மைப்படுத்தினர். தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அடுத்தடுத்து இரண்டு முறை இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்து, மருத்துவர்களை முடுக்கிவிட்டார். இந்நிலையில், நம் செய்தியில் குறிப்பிட்டிருந்த 'கூடுதல் படுக்கைகள்' என்றத் தகவலைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் கூடுதலாக 15 படுக்கைகளை இந்த மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். அதோடு கூடுதலாக ஒரு மருத்துவரையும் சேர்த்திருக்கிறார். கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் படுக்கைகளைப் போட இடவசதி இல்லாததால், கள்ளப்பள்ளி ஊராட்சிக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் பதினைந்து படுக்கைகளையும் போட வைத்து, புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவரை அங்கே பணிபுரிய வைத்திருக்கிறார். அதோடு, "இந்த ஏற்பாடுகள் தற்காலிகமானதுதான். விரைவில் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்' என்ற உத்தரவாதத்தையும் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதனால், நெகிழ்ச்சியடைந்த மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும் விகடன் பத்திரிகைக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.