வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (02/11/2017)

கடைசி தொடர்பு:10:46 (02/11/2017)

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

senpaavalli - puvananatar

மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்து வருவதைப்போல கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலிலும் அம்பாளே அரசாட்சி செய்துவருகிறாள். இந்தக் கோயில் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

kodiyetram

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமி, அம்பாள் மற்றும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.  

9-ம் நாள் திருவிழாவான வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாள் திருவிழாவான வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு அம்பாள் தபசு சப்பரத்தில் தபசுக்காக எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு பூவனநாதராக தபசுக் காட்சி அளிக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாள் திருவிழாவான 13-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அம்பாள் பல்லக்கில் வீதியுலா வருதலும், இரவு 7 மணிக்கு சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க