வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:49 (02/11/2017)

மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலியான சம்பவம்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வசித்துவந்த இரண்டு சிறுமிகள், வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடியுள்ளனர். அப்போது, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததால் இரண்டு சிறுமிகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இரண்டு பேரும் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், 'இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.