'உடனடியாக சீரமைக்க முடியாது' என்றதால் ஜெயக்குமாருடன் கொடுங்கையூர் மக்கள் கடும் வாக்குவாதம்! | Kodungaiyur people arguments with Minister Jayakumar

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:50 (02/11/2017)

'உடனடியாக சீரமைக்க முடியாது' என்றதால் ஜெயக்குமாருடன் கொடுங்கையூர் மக்கள் கடும் வாக்குவாதம்!

தெருக்களை உடனடியாக பார்த்து சீரமைக்க முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமாருடன் கொடுங்கையூர் மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். கொரட்டூர், முடிச்சூர், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை கொடுங்கையூரில் நேற்று மழைநீரில் விளையாடிக்கொண்டிருந்த யுவஸ்ரீ, பாவனா என்ற இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எதிரொலித்தன. மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் அரசை கடுமையாக விமர்சித்தனர். பிரச்னை அதிகரிக்கவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 8 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். மேலும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அறிவித்ததோடு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமிகளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் பழனிசாமி, சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவித்தார்.

மின்சார வாரியத்துக்கு எதிராக கொடுங்கையூர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று கொடுங்கையூர் வந்தார். சிறுமிகளின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜெயக்குமாரிடம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெருக்களை பார்த்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அப்பாேது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களை உடனடியாக பார்த்து சீரமைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்ததால், பொதுமக்கள் கோபம் அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

இதைத் தாெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. சிறுமிகளின் உயிரிழப்புக்கு மின்வாரியத்தின் கவனக்குறைவுதான் காரணம். இதை எந்தவிதத்திலும் ஏற்கவோ, மன்னிக்கோ முடியாது. யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் தவறுகளை தடுக்கும். மின்சார வாரியத்தை கேட்காமல் மின் இணைப்பு பெறுவது தவறு. வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என்றாலும் மழைநீர் தேங்கவில்லை" என்று கூறினார்.