வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (02/11/2017)

கடைசி தொடர்பு:12:22 (02/11/2017)

நெல்லையைப் புரட்டிப் போட்ட ஒருநாள் மழை! வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

மழை வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு நிலைமை இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை கொட்டித் தீர்க்கிறது. மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 89 அடியாக உயர்ந்து இருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. அத்துடன் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை

நெல்லை நகரில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பேட்டை நரிக்குறவர் காலனி முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டது. அந்தப் பகுதியில், ஏற்பட்ட சீரழிவுகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருகிறார். செக்கடித் தெருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் தரைக்குக் கீழ் உள்ள தளத்தில் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்கிருந்த ஜெராக்ஸ் கடை முழுவதுமாக சேதம் அடைந்தது. கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் எந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின.

நெல்லை டவுனில் உள்ள மகிழ்வண்ணபுரம், பாப்பா தெரு ஆகிய இடங்களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. மேலப்பாளையத்தின் ஆமீன்புரம், சந்தைத் தெரு, சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அநேக இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணி வரையிலும் உள்ள 24 மணி நேரத்தில், அதிகபட்ச மழை அளவாக 17.57 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. பாளையங்கோட்டையில் 13.4 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 51 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 4 செ.மீ மட்டுமே. 

சராசரியாக 4 செ.மீ மழையைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக பேரிடர் நடவடிகைகளை மேற்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அடிக்கடி மாவட்ட நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், சாதாரண மழையைக் கூட சமாளிக்க முடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.