வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (02/11/2017)

கடைசி தொடர்பு:13:00 (02/11/2017)

கந்துவட்டிக்காரர்கள்மீது 10 நிமிடத்தில் நடவடிக்கை! மதுரை போலீஸ் கமிஷனர் அதிரடி

அரசு நிர்ணயித்துள்ளதற்கு மேல் வட்டி வாங்குவோர்மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் அடுத்த 10 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கந்துவட்டிக் கொடுமையால் கடந்த வாரம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் தீக்குளித்து இறந்தனர். இச்சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் உலுக்கிவிட்டது. கந்துவட்டிக் கொடுமைக்கு காரணம், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தைக் காவல்துறை சரியாக நடைமுறைபடுத்தாததுதான் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகிறது. உயர் நீதிமன்றத்திலும் இதுசம்பந்தமான வழக்கு நடைபெற்றுவருகிறது.

மகேஷ்குமார் அகர்வால்

இந்தநிலையில், கந்துவட்டிக் கொடுமை அதிகமுள்ள மதுரையில் கந்து வட்டிக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இன்றும் நாளையும் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார்களை வாங்கவுள்ளார். அரசு 2003-ல் கொண்டுவந்துள்ள கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மாறாக அதிக அளவு வட்டி வாங்குவோர் பற்றி பாதிக்கப்பட்டவர் தரும் புகார்களுக்கு 10 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதை மதுரை மாநகர மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க