வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:46 (02/11/2017)

'ஆதாரமற்றது ஆதார்' - டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரலில் ஒரு பாடல்!

இந்திய நாட்டு மக்கள் அனைவருக்குமான பொது அடையாளமாக `ஆதார் அட்டை'யை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. அரசின் திட்டங்களால் பலன் அடைவதற்கும், பல்வேறு தனியார் சேவைகளுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டது. `கட்டாய ஆதார் என்பது, தனி உரிமைமீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்' என, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுவருகின்றன. வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்துவரும் நிலையில், ஆதார் அட்டையால் தனி உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதுகுறித்து கலைப்படைப்புகளும்  விவாதங்களும் நடத்தப்பட்டுவருகின்றன. 

யூடியூப் சேனலான `வெட்டிவேர் கலெக்டிவில்’, ராப் இசைக்கலைஞரான சோஃபியா அஷ்ரஃப், கர்னாடக இசைப் பாடகரான டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் பெருமாள் முருகன், சமூகச் செயற்பாட்டாளர், பாடகர் ஷீத்தல் சாத்தே & சச்சின் மாலி (நவயான் மகா ஜல்சா) ஆகியோரின் பங்களிப்புடன் `அகவுரிமைப் பாடலை' சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன், அர்ச்சனா சேகர் மற்றும் பலர் இணைந்து தயாரித்துள்ளனர்.

``தனியுரிமை, என் சுதந்திரத்தின் அடிப்படை. அதுவே என் அடிப்படை உரிமையும்கூட. உங்களால் அடையாளப்படுத்தப்படுவதை நான் மறுக்கிறேன்” என்ற சோஃபியா அஷ்ரஃபின் உறுதியான, கோபமான தொனியில் ஆங்கிலத்தில் தொடங்குகிறது `Privacy Matters' என்ற அகவுரிமைப் பாடல். 

ஆதார் அட்டைதொடர்ந்து டி.எம்.கிருஷ்ணாவின் குரலில்...

``கபீர் சொல்கிறார்... இது எனது அன்பின் வீடு, இது உங்களின் தனிச் சொத்தல்ல. 
எனது சுதந்திரம் உங்களின் கருணையில் இல்லை.

எதையும் தேர்ந்தெடுப்பதற்கும் வாழ்வதற்கும் தனியுரிமையும் என்னுடையது.

நான் வரையறுத்தது.

உண்பதையும் அருந்துவதையும் காதலுற்று இணைவதையும் அரசியலையும் நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களது ஐடிகளிலிருந்து விடுபடுவதற்காக

இந்த உரிமைப்போரை நான் வென்றெடுத்திருக்கிறேன்.

துப்புரவு செய்யும் பெண்ணும் இறந்த கால்நடையின் தோலை உரிக்கும் அவரும்,

சடலங்களைப் புதைப்பவரும், இறைச்சி விற்பவரும், விலைமாதர்களும்,

தேவதாசிகளும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவரும்,

எயிட்ஸ் இருப்பவரும், ஆதரவற்றவரும், தெருவோரம் வசிப்பவரும் நானாகவே இருக்கிறேன்.

இத்தகைய உங்கள் அநீதியிலிருந்து விடுபட்டு,

உங்கள் அடையாளத்திலிருந்து விடுபட்டிருக்க விரும்புகிறேன்.

எனது அடையாளம், எனது சாதி, எனது வேலை,

எனது நண்பர்கள், உணவு, உடை, எனது எண்ணங்கள்
இவை எதுவும் உனக்குத் தேவையற்றது. 

கேளுங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே...
எங்களது கோரிக்கைக்குச் சாதகமாக நிற்கிறது நீதிமன்றம்.
தனியுரிமைக்கு உங்கள்  `ஆதார்’ ஆதாரமற்றது!”

என்னும் பொருளுடன் `ஆதார் கோ அப் ஹம் கரேங்கே நிராதார்...' என முடிகிறது டி.எம்.கிருஷ்ணாவின் இந்திப் பாடல்.
பாடலின் வீடியோ பதிவைப் பார்க்க:

எப்போதும் கண்காணிக்கப்படுவதையும், அதனால் இழக்கப்போகும் அனைத்தையும் குறித்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதையும், `எதைச் சாப்பிட வேண்டும், எதை பேசவும் எழுதவும் வேண்டுமென ஆணையிட வந்திருக்கிறது ஆதார்’ என்று தொடங்கும் ஷீத்தல் சாத்தே குழுவினரின் மராத்தியப் பாடலுடன் முடிகிறது பிரைவசி மேட்டர்ஸ் பாடல். ஆதார் அட்டை

அக்டோபர் 29-ம் தேதி, சென்னை கவிக்கோ மன்றத்தில் `அகவுரிமைப் பாடலின்’ இசைத்தகடு வெளியிடப்பட்டு, தற்போது யூடியூப் சேனலிலும் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் நித்தியானந்த் ஜெயராமனிடம் இந்தப் படைப்பின் நோக்கம்குறித்து கேட்டபோது,

``இன்று பெரும் அச்சுறுத்தலில் இருக்கும் இந்த `அகவுரிமை' என்பது, இந்திய அரசியல் சட்டத்தால் அளிக்கப்படுவதல்ல. இது இயல்பாகவே குடிமகனுக்கு இருக்கவேண்டிய பிறப்புரிமை. கட்டாய ஆதார், மாட்டிறைச்சிக்குத் தடை, தியேட்டர்களில் தேசியகீதம், கேரளாவில் முஸ்லிம் இளைஞரை மணந்துகொண்ட அகிலா என்னும் ஹதியாவுக்கு பெற்றோரின் பாதுகாப்பில் இருப்பதே நல்லது எனத் தீர்ப்பளித்த அமர்வு என, பல்வேறு விதங்களில் வெறுப்புணர்ச்சியைச் தூண்டும்விதங்களில் இந்துத்வவாதிகள் செயல்படுகிறார்கள். வெறுப்பு அரசியல் முளைவிடத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, 24.8.2017 அன்று `தனி மனிதர்களின் ரகசிய உரிமை (Privacy) என்பது, பறிக்கப்படக் கூடாத அடிப்படை உரிமை' (Fundamental Right) என்பதை உறுதிசெய்த தீர்ப்பு ஆறுதலளித்தது. இந்தத் தீர்ப்புகுறித்த விரிவான விவாதத்துக்கும், அத்துமீறல்களைக் குறித்த விவாதத்தைக் கட்டமைக்கவும், பிரசாரமாக இத்தகைய படைப்புகளைக் கொண்டுவரத் தொடங்கியிருக்கிறோம்” என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்