வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (02/11/2017)

கடைசி தொடர்பு:18:25 (02/11/2017)

சரணாலயத்தில் மழைநீரைச் சேமிக்காமல் வீணாக்கலாமா?

நாகை மாவட்டம், கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படாததால் மழைநீரைச் சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது.  

கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பசுமைமாறாக் காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 60 வகையான மரங்களும், 157 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன. இங்கு புள்ளிமான்கள், வெளிமான்கள், குதிரைகள், குரங்குகள், நரிகள், பன்றிகள், முயல்கள், மயில்கள் என ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் இயற்கையோடு இணைந்து வசிக்கின்றன. இந்த விலங்குகளுக்குத் தாகம் தீர்க்க 58 குளங்களும், 16 செயற்கைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால், விலங்குகள் தாகத்தில் தவிப்பதும், தண்ணீர்த்தேடி காட்டைவிட்டு வெளியேறி வரும்போது ஆபத்தில் சிக்கி இறப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.  

இச்சூழ்நிலையில், இயற்கையாய் அமைந்த 58 குளங்கள் உள்ள சரணாலயத்தில், இந்தாண்டு அவுலியாக்கனி, நண்டுப்பள்ளம், சவுக்குப்பிளாக், அருவங்கனி, மாட்டுமுனியன் குளம் ஆகிய ஐந்து குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் தண்ணீரில்லாமல் தவிக்கும் விலங்குகளின் தாகம் தீர்க்க பல லட்ச ரூபாய் செலவில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வனத்துறையினர் தருகிறார்கள். அந்தச் செலவிற்குப் பதிலாக மண்மூடிக் கிடக்கும் மீதமுள்ள 53 குளங்களைத் தூர்வாரி மழைநீரைச் சேமித்தாலே கோடைக்காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது. மேலும், வனத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவிலுள்ள முனியப்பன் ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்தால், சரணாலயத்தில் தண்ணீர்ப் பிரச்னை எப்போதுமே இருக்காது.  

எனவே, இயற்கை அளிக்கும் அருட்கொடையான மழைநீரை வீணாக்காமல் தொலைநோக்குப் பார்வையுடன், எல்லாக் குளங்களையும் தூர்வாரி மழைநீரைச் சேமிக்க வேண்டும். அதுவே, வாயில்லா ஜீவன்களைப் பாதுகாக்கும் சரணாலயத்திற்குச் செய்கின்ற புனிதமானப் பணியாகும். அரசும், அதிகாரிகளும் இதில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க