வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (02/11/2017)

கடைசி தொடர்பு:19:45 (02/11/2017)

"சப்பாத்திக்கு 5%, இட்லி தோசைக்கு 28% ஜி.எஸ்.டி வரியா?": கொதிகொதித்த கொடிசியா தலைவர்.

ஜி.எஸ்.டி வரி சமூகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அண்மையில் வெளியான மெர்சல் படமும் ஜி.எஸ்.டி குறித்து விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி சிக் மண்ட் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது.

சுந்தரம்

அஸ்ஸாம், பீகார் மாநில துணை முதல்வர்களும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர். ஜி.எஸ்.டி வரியால், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் பேசியதாவது, "கோவை, கொடிசியா அமைப்பின் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. மோட்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறு நிறுவனங்கள், ஜாப் ஆர்டர் மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஜாப் ஆர்டர் பெறுவதும் மோட்டர்களை விற்பனை செய்வதும் முடியாத நிலையில் உள்ளது. எனவே, ஜாப் ஆர்டர்களையும் ஜி.எஸ்.டி-யின் கீழ் இணைக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்குதான் முக்கியத்துவம் தருகின்றன. இன்ஜினீயரிங் நிறுவனங்களுக்கு 18 சதவிகிதம் வரி என்பது மிகவும் கடினமாக உள்ளது. அதேபோல, இன்வாய்ஸ் மேட்ச் செய்வதும், ஜி.எஸ்.டி-யில் முக்கிய பிரச்னையாக உள்ளது.

ஜி.எஸ்.டி

அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டப் பிறகு, சொகுசு பொருள்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிரைண்டருக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் கிரைண்டர் சொகுசுப் பொருளாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது அத்தியாவசியப் பொருள். இட்லி, தோசை இல்லாமல் நாங்கள் இருக்க முடியாது. ஏழை, எளியவர்களுக்கும் இட்லி, தோசை முக்கிய உணவாக இருக்கிறது.

அதேநேரத்தில், அட்டா சக்காவின் வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, கிரைண்டர் எங்களுக்கு அத்தியாவசியம் என்பதால் அதன் மீதான வரியை 5 சதவிதமாகக் குறைக்க வேண்டும். மேலும், பெரும்பாலான மக்கள் சிறு நிறுவனங்களிடம் இருந்துதான் கம்ப்ரசர்களை வாங்குகின்றனர். எனவே, அதன்மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும்.

குறிப்பாக, தமிழகத்தில் டிராக்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தப் பொருள்களுக்கு முதலில் 17.5 சதவிகிதம்தான் வரி இருந்தது. ஆனால், அது தற்போது 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்" என்றார்.