வெளியிடப்பட்ட நேரம்: 05:08 (03/11/2017)

கடைசி தொடர்பு:11:22 (03/11/2017)

படியில் பயணித்த ஓட்டுநர் மரணம் - திருப்பூரில் துயரச் சம்பவம்

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர் தவறிவிழுந்து மரணமடைந்த சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது.

திருப்பூர் ஓம்சக்தி கோயில் பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி. அப்பகுதியில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை. தமிழக அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லாலாப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திருப்பூருக்கு வந்து ஓம்சக்தி கோயில் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த பழனிசாமி, கடந்த அக்டோபர் 31-ம் தேதி, திருப்பூர் புதிய பேருந்துநிலையத்தில் இருந்து, அரசு பேருந்து ஒன்றில் ஏறி,  பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக பயணித்திருக்கிறார். அப்போது பேருந்துக்கு உட்பகுதியில் நுழையாமல், படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணித்திருக்கிறார் பழனிசாமி. அப்போது மேட்டுப்பாளையம் என்ற பகுதியின் வழியே பேருந்து செல்லும்போது, திடீரென பேருந்தில் இருந்து தவறி விழுந்திருக்கிறார். அப்போது தலைப் பகுதியின் பின்பக்கத்தில் பலத்த காயமடைந்து கிடந்த பழனிசாமியை மீட்ட அப்பகுதியினர், அவரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.