நிரம்பி வழியும் சிதம்பரம் நடராஜர் கோயில் குளம்: பக்தர்கள் மகிழ்ச்சி! | Chidambaram Natarajar Temple pond filled

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/11/2017)

கடைசி தொடர்பு:15:00 (03/11/2017)

நிரம்பி வழியும் சிதம்பரம் நடராஜர் கோயில் குளம்: பக்தர்கள் மகிழ்ச்சி!

வடகிழக்குப் பருவ மழையால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கைக் குளம் நிரம்பி வழிகிறது. அதனால், தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் குளம்

இதுகுறித்து பொதுதீட்சிதரில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர், "உலகின் மையப்புள்ளியாம் சிதம்பரம் நடராஜர் கோயில். அக்கோயிலின் சிவகங்கை குளம் நிரம்பியிருப்பது என்றால் அது உலக நன்மைக்குத்தான். சிவகங்கை என்பது சிவனின் சிரசையிலிருந்து உருவானது என்பது ஐதிகம். இந்தக் குளமும் அப்படித்தான். அதனால்தான் இதற்கு சிவகங்கைக் குளம் என்று பெயர் வந்தது.

இக்குளத்தில் நீராடினால் மணம் குளிர்ந்து சாந்தமடைவார்கள். கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் இக்குளம் வறண்டு போனது. இதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாவாசிகள் அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இதனால், பேராபத்து ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று பக்கதர்கள் அச்சப்பட்டார்கள். கோயில் என்றால் நீர்நிலைகளோடு ஒட்டியிருக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் கோயிலுக்குள் குளத்தை வெட்டி அதில் தண்ணீரைச் சேமித்தார்கள்.

அதைப் புனித தீர்த்தமாகக் கருதி அதில் நீராடி தங்களுடைய பாவங்களையும் போக்கிகொண்டார்கள். இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் சிவகங்கைக் குளம் நிரம்பி வழிந்தோடும் நிலையில் இருப்பது மிக்க சந்தோஷமாக இருக்கிறது. இதனால், வரும் மார்கழியில் இக்கோயிலில் தேரோட்டமும் ஆருத்ரா தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெறும். அதற்குத் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் இக்குளத்தில் நீராடி ஐய்யனின் அருளாசியைப் பெறுவார்கள்" என்றார்.