நீரில் மூழ்கியது பயிர்கள்! கவலையில் நாகை விவசாயிகள் | crops sank: farmers in depression

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/11/2017)

கடைசி தொடர்பு:10:27 (04/11/2017)

நீரில் மூழ்கியது பயிர்கள்! கவலையில் நாகை விவசாயிகள்

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாகக் கடந்த ஐந்து நாள்களாக இடைவிடாது பொழிந்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் சாகுபடி செய்த பயிர்கள் மூழ்கி, விவசாயிகளின் மகிழ்ச்சியைத் தொலைத்திருக்கிறது.  

திட்டச்சேரி, திருமருகல், திருப்பூண்டி, தலைஞாயிறு, வாய்மேடு ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் நேரடி நெல்விதைப்புச் செய்த சுமார் 2,000 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் மீண்டும் வளம்பெற வேண்டுமென விவசாயிகள் வணங்கும் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குளம்போல உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம்செய்ய இடையூராக இருக்கிறது.  

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் திருநகரி வாய்க்கால் உடைப்பெடுத்து, மழைநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் விளக்குமுகத்தெரு, வள்ளுவர் தெரு, தாமரைக்குளத்தெரு, ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பத்தினர் அருகேயுள்ள பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கப்படுகிறது. இப்பகுதினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு, முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.  

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், மாதானம், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், அத்தியூர், அரசூர், குமாரக்குடி ஆகிய ஊர்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு செய்த வயல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. இப்பகுதி விவசாயிகள் மழைநீரை எப்படி விளைநிலத்திலிருந்து வடிக்கட்டுவது என்று திகைத்து நிற்கின்றனர். அதுபோல், செம்பனார்கோயில் வட்டாரத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மூன்றுநாள் மழையிலேயே மூழ்கிக் கிடக்கிறது.  

பயிர் பாதிப்புப் பற்றி விவசாயி பாபுவிடம் பேசியபோது, ``பாசன, வடிகால், ஆறுகள், வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் முறையாகத் தூர்வாராமல் ஏதோ பெயரளவுக்கு ரோட்டோரத்தில் பார்வைப்படும் இடங்களில் மட்டும் தூர்வாரி அரசுக்குக் கணக்குக்காட்டி கல்லாக்கட்டிவிட்டனர். அதனால்தான், மூன்றுநாள் மழைக்கே தாங்கமுடியாமல் மழைநீர் வடிய வழியின்றி பயிர்கள் மூழ்கி கிடக்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் கிராம உள்வாய்க்கால்களை குடிமராமத்து என்ற பெயரில் விவசாயிகளே செய்துவந்தோம். அதனால், ஒருமாதம் மழைபெய்தாலும் வெள்ளநீரை எளிதாக வடிக்கட்டிவிடலாம்.  இதற்கான நிதியை தற்போது அரசு தற்போது பொதுப்பணித்துறைக்கு மாற்றியதால் அவர்களோடு ஆளும் கட்சியினர் கூட்டணி அமைத்து தூர்வாருவதற்குப் பதிலாகப் பணத்தை வாரிவிடுகிறார்கள்.  கடன்வாங்கி, கஷ்டப்பட்டு இந்த வருடமாவது நன்றாக நடவுச்செய்தோம் என்ற சந்தோஷம் பத்து நாள்கள்கூட நீடிக்கவில்லை. 10 ஏக்கரில் மூழ்கிக்கிடக்கும் பயிர்களைப் பார்க்க மனமில்லாமல் நான் வயல் பக்கமே போகவில்லை” என்றார் சோகமாக.